மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ‘சமத்துவ நடைப்பயணம்’ என்ற தலைப்பில் இன்று (01-01-26) முதல் வரும் 12ஆம் தேதி வரை நடைப்பயணம் மேற்கொள்கிறார். திருச்சியில் இருந்து மதுரை வரை மேற்கொள்ளும் இந்த நடைப்பயணம், திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலில் இன்று காலை தொடங்கியது. இந்த நடைபயணத்தை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “இன்றைக்கு நாட்டில் நிலவக்கூடிய முக்கியமான பிரச்சனை என்றால், அது சாதி மத மோதர்கள்தான். ஒன்றிய அமைச்சர் உள்ளிட்ட பொறுப்பில் இருக்கக்கூடிய பதவிகள்இருக்கக்கூடியவர்களே வெறுப்பு பேச்சுக்களை பேசியும் இரு பிரிவினருக்கிடையே மோதலை தூண்டுகிற விதமாக செயல்படுவதை பார்க்கிறோம். தனிப்பட்ட முறையிலான அவர்களுடைய கொள்கைகளுக்கு நம் இந்திய நாட்டை ஒருமைப்பாட்டை, அமைதியை சீர்குலைக்கக்கூடிய நாசக்கார வேலையை அவர்கள் செய்கிறார்கள். நாட்டில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், ஆதி திராவிடர்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் என்று எல்லாரும் அச்சத்துடன் வாழக்கூடிய ஒரு நிலைமை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. அண்மையில் இந்த கிறிஸ்துமஸ் சமய விழாவின் போது பல்வேறு இடங்களில் நடந்த தாக்குதலை பற்றி எல்லாருக்கும் தெரியும். சில ஆண்டுகளுக்கு முன்னாடி நம் நாட்டில் இந்த நிலைமை இருந்ததில்லை. ஊரே ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக இருந்த காலம் சென்று இன்றைக்கு ஒருத்தருக்கு ஒருத்தரை எதிரியாக கட்டமைக்கும் வேலைய பிளவுவாத சக்திகள் இன்றைக்கு தெளிவாக செய்து வருகிறார்கள்.
அன்பு செய்ய சொல்லித் தர வேண்டிய ஆன்மீகத்தை, சில கும்பல் வம்பு செய்வதற்காக பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் தான் வைகோ, இந்த சமத்துவ நடைப்பயணத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நடைப்பயணம் நிச்சயமாக புதிய வரலாற்றை படைக்கும். இந்த நடைப்பயணத்தின் தாக்கத்தை சமூக வலைத்தளங்களில் கொண்டு சேர்த்து இளைஞர்களை பேசுபொருளாக ஆக்க வேண்டியது ஊடகங்கள் மற்றும் எல்லோருடைய கடமை. மது போதையையும், அதைவிட ஆபத்தான மதவாத அரசியல் போதையையும் தமிழ்நாட்டுக்கு நுழையவிடாமல் தடுத்திட நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும். வைகோவின் நடைப்பயணம் நிச்சயமாக புதிய எழுச்சியை உருவாக்கி இருக்கிறது. வைகோவின் இந்த சமத்துவ நடைப்பயணம் வெற்றி பெற வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன் .
அதே நேரத்தில், உரிமையோடு அவரிடத்தில் உங்கள் அனைவரின் சார்பில் நான் கோரிக்கை வைக்க விரும்புகிறேன். உங்களுடைய நோக்கம் பெரிது என்றாலும் உங்களுடைய உடல் நலம் எங்களுக்கு பெரியது. எனவே, இந்த பயணத்தை நீங்கள் கவனமாக மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், இது மாதிரியான கடுமையான நடைப்பயணங்களை நீங்கள் இனி மேற்கொள்ள கூடாது என்று என்னுடைய அன்பான வேண்டுகோள். நீங்கள் கட்டளையிட்டால் அதை செய்வதற்கு மதிமுகவினர் தயாராக இருக்கிறார்கள். அதனால்தான் உரிமையோடு கேட்கிறேன். நீங்கள், உங்களுடைய உடல்நிலை பாதுகாக்க வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக்கொண்டு அன்பான வேண்டுகோளாக விடுக்கிறேன். உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்க வாழ்க வாழ்க என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்” என்று பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/02/vaikmk-2026-01-02-14-39-47.jpg)