மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ‘சமத்துவ நடைப்பயணம்’ என்ற தலைப்பில் இன்று (01-01-26) முதல் வரும் 12ஆம் தேதி வரை நடைப்பயணம் மேற்கொள்கிறார். திருச்சியில் இருந்து மதுரை வரை மேற்கொள்ளும் இந்த நடைப்பயணம், திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலில் இன்று காலை தொடங்கியது.   இந்த நடைபயணத்தை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Advertisment

அதன் பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “போதை பொருள் , அந்த போதை பொருளின் ஒழிப்பு,  சாதி மத மோதல் தடுப்பு உள்ளிட்ட நாட்டுக்கு தேவையான கருத்துக்களை வலியுறுத்தி வைகோ தொடங்கி இருக்கக்கூடிய இந்த சமத்துவ நடைப்பயணம் மாபெரும் வெற்றி பெற வேண்டும். நிச்சயமாக வெற்றி பெறத்தான் போகிறது. இது மாதிரியான பயணங்களில் என்ன பயன் என்று சிலர் கேட்கலாம். காந்தியின் நடைப்பயணமும் மாபோசியின் நடைப்பயணமும் வரலாற்றில் புரட்சி ஏற்படுத்தி இருப்பது போல் அந்த தாக்கத்தை அவர்கள் உணர வேண்டும். இப்படியான நடைப்பயணங்கள் தான் தலைவர்கள் மக்களிடம் சென்று எளிய வகையில் சுலபமான முறையில் நேரடியாக தங்குடைய கருத்துக்களை சொல்ல முடியும். அந்த நடைப்பயணத்தை தேவை குறித்தும், அதிலுள்ள நியாயங்கள் குறித்தும் மக்கள் பேசத் தொடங்குவார்கள். மக்கள் பேச பேசதான் அந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். திராவிட இயக்க மேடைகளிலும், நாடாளுமன்றத்திலும், தமிழ்நாட்டுக்காக தமிழர்களுக்காக அவர்களுடைய உரிமைகளுக்காக கர்ஜித்த வைகோ, முதுமையை முற்றிலுமாக தூக்கி எறிந்துவிட்டு  இந்த நடைப்பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

Advertisment

இளைஞருடைய எதிர்காலத்தை சீரழிக்கக்கூடிய  போதை பொருட்களை நாம் நிச்சயமாக ஒழிக்க வேண்டும், அதில் எந்த கருத்து மாறுபாடும், வேறுபாடும் கிடையாது . போதையின் பாதையிலிருந்து இளைஞர்களை காக்க வேண்டும்,  அதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அது மூலமாக ஓரளவுக்கு பலன் கிடைத்து வருகிறது. ஆனால் அந்த பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அதன் பாதிப்புகளை உணர்ந்து அந்த பழக்கத்தை கைவிட வேண்டும். அவர்கள் கூட இருப்பவர்கள் அவர்களை திருத்த வேண்டும். போதைப் பொருள் பழக்கம் என்பது மிகப்பெரிய நெட்வொர்க். அந்த நெட்வொர்க்கை அழிக்க மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் இணைந்து செயல்பட வேண்டும். ஏராளமான போதை வஸ்துகள், நாட்டுக்குள்  வருகிறது. அதிகப்படியான போதை பொருட்கள் எந்தெந்த  துறைமுகங்கள் வழியாக நாட்டுக்குள் நுழைகிறது என்று நாம் செய்திகளில் பார்க்கிறோம். இந்த நுழைவு வாயில்களை நாம் அடைத்து ஆக வேண்டும். நாட்டுடைய எல்லைக்குள் போதை பொருட்க ள் வருவதையும் மாநிலம் விட்டு மாநிலம் கடத்தப்படுவதையும் ஒன்றிய அரசின் முகமைகள் தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும். அதற்கு அனைத்து மாநில அரசுகளும் தேவையான ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும்.

கடந்த சில மாதங்களில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் இருந்து  ஒரு லட்சத்துக்கு அதிகமான போதை மாத்திரைகளை பிடித்திருக்கிறோம். இந்த கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, ஹரியானா போன்ற மாநிலங்களை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.  அதே போல இன்னும் சில வழக்குகளில், குற்றவாளிகள் நைஜீரியா போன்ற நாடுகளை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.இப்படிப்பட்ட நெட்வொர்க்கை ஒழிக்க எல்லோரும் கை கோர்க்க வேண்டும். நம்மை பொறுத்தவரைக்கும் போதை பொருள் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.  தமிழ்நாடு அரசின் துறைகள் ஒன்றிய அரசின்  துறைகளுடன் அண்டை மாநில காவல் துறையினரோடு  முழு ஒத்தழைப்பையும் கொடுத்து செயல்பட்டு வருகிறது. போதை ஒழிப்பு என்பது சமூகத்துடைய கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும். முக்கியமாக கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் பொறுப்புணர்ச்சியோடு தங்களுடைய படைப்புகளை உருவாக்க வேண்டும். போதையின் தீமைகளை சொல்வது தவறில்லை, அதை மிகைப்படுத்துவது ஒரு தலைமுறையையே சீரிழித்துவிடும்.

Advertisment

அதேபோல் பெற்றோர்கள்,  தங்கள் குழந்தைகள் பாசத்தை  காண்பிக்க வேண்டும். அதற்காக பாதை மாறி போகும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. யூடியூப், இன்ஸ்டாகிராம் மூலமாக வரக்கூடிய ஈசி மொழி பசங்களை தவறான பாதைகளை கொண்டு போவதற்கான வாய்ப்பு தான் அதிகம். எனவே குழந்தைகளை பெற்றோர் பொறுப்புடன் வளர்க்க வேண்டும். முக்கியமாக அம்மா, அப்பா, அக்கா, தங்கை வீட்டில் இருக்கக்கூடிய சொந்தங்கள் நம் வீட்டு பசங்க தவறான வழியில் போகாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும். ஒருத்தருக்கு ஒருத்தர் மனசு விட்டு பேச வேண்டும். அப்படி பேசினாலே பாதி பாரம் குறைந்துவிடும். தவறான பாதைக்கு போகக்கூடிய தேவை நிச்சயமாக இருக்காது. அதேபோல் ஆசிரியர்கள் , சமூக அளவில்  பிரபலங்கள் என எல்லாருமே போதை  பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை தொடர்ந்து  பரப்ப வேண்டும்” என்று கூறினார்