தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வரக்கூடிய நேரத்தில் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், காவிரிப்படுகை மாவட்டங்களிலும் மழை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை வலுத்திருக்கூடிய நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (21-10-25) மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர். இதில் மாவட்ட ஆட்சியர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை முதல்வர் வழங்கினார். இந்த ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சருடன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறை சார்ந்த அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், தலைமைசெயலாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும், உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்திட ஜேசிபி இயந்திரங்கள், படகுகள், மோட்டார் பம்புகள், மர அறுப்பான்கள், லாரி மற்றும் மின் கம்பங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், தயார் நிலையில் எந்த விதத்திலும் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகாத வகையில் மீட்பு பணிகள் இருக்க வேண்டும் என்றும் தாழ்வான பகுதியில் மக்கள் இருக்கக்கூடிய இடங்களை கண்டறிந்து உடனடியாக அவர்களை மீட்க கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தின் போது மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டாமாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூ, தஞ்சாவூர் ஆகிய மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.