Chief minister Devendra fadnavis with raj thackeray
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, இன்று (21-08-25) மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை ரகசியமாக சந்தித்து பேசியிருப்பதாக வெளியான தகவல் மாநில அரசியலில் பேசுபொருளாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ‘மகாயுதி’ என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில துணை முதல்வர்களாக சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரும் பொறுப்பு வகித்து வருகின்றனர். மகாயுதி கூட்டணிக்குள் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டாலும், கூட்டணியை கைவிடாமல் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி நடத்தி வருகிறார்.
இதனிடையே, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீநாத் ஷிண்டே வருமானத்திற்கு சொத்து வைத்திருப்பதாக எழுந்த புகாரில் வருமான வரித்துறை ஸ்ரீநாத் ஷிண்டேவுக்கு நோட்டீஸ் அனுப்பியது, ஏக்நாத் ஷிண்டேவின் உதவியாளர் அமித்ஷங்கே மதுபான முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்டிருப்பது ஆகியவற்றால் ஏக்நாத் ஷிண்டே கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக, சில தினங்களுக்கு முன்பு டெல்லிக்குச் சென்ற ஏக்நாத் ஷிண்டே, கூட்டணி அரசியலில் இருந்து விலகி வெளியே இருந்து ஆதரவு தருவதாக பா.ஜ.க தலைமையிடம் கூறியதாக தகவல் வெளியானது.
இந்த சூழ்நிலையில், பெஸ்ட் ஊழியர் கூட்டுறவு கடன் சங்கத் தேர்தல் நேற்று (20-08-25) நடைபெற்றது. இந்த தேர்தலில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகியவை கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது. 21 இடங்கள் கொண்ட அந்த தேர்தலில், உத்தவ் தாக்கரே சிவசேனா - மகராஷ்டிரா நவநிர்மாண் சேனா கூட்டணி ஒரு இடத்தைக் கூட வெல்லாமல் படுதோல்வியடைந்தது. பா.ஜ.க ஆதரவு குழு 7 இடங்களை வென்றாலும், பெஸ்ட் ஊழியர்கள் சங்கத்தின் ஆதரவு பெற்ற குழு 14 இடங்களை வென்றது.
20 ஆண்டுகால அரசியல் பிரிவினைக்குப் பிறகு, இந்தி திணிப்புக்காக உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு ஒன்றிணைந்தனர். இது மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. வரவிருக்கும் நகராட்சித் தேர்தல்களில் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து போட்டியிடவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், பெஸ்ட் ஊழியர் சங்கத் தேர்தலில் படுதோல்வியடைந்திருப்பது கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ராஜ் தாக்கரே தனது வர்ஷா இல்லத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடன் இன்று (21-08-25) ரகசிய சந்திப்பை நடத்தியுள்ளார். இது அங்கு பேசுப்பொருளாக மாறி வருகிறது. மேலும், கூட்டணி தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில், “ பல தலைவர்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தற்போதைய முதல்வரைப் போலவே மற்றவர்களைச் சந்திப்பார்கள். ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வது மாநிலத்தின் பாரம்பரியம். இந்த சந்திப்புக்கு எந்த அரசியல் நோக்கமும் இல்லை” என்று கூறினார்.