புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் பழங்கள், காய்கறிகள், பூக்கள் உற்பத்தி அதிகம். அதனால் இங்கு விளையும் விளை பொருட்களை மதிப்புக்கூட்டும் தொழிற்சாலைகள் மற்றும் காய்கறி, பழங்கள், பூக்கள் பல நேரங்களில் விலை குறைவாக விற்பதால் அதனைத் தேக்கி வைக்கக் குளிர்பதன கிடங்கும் வேண்டும் என்று விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை. 

Advertisment

விவசாயிகளின் இந்த கோரிக்கை ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான மெய்யநாதன் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்ற நிலையில் கடந்த நவம்பர் 10ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் நலத்திட்டங்கள் வழங்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளையும் அறிவித்தார். அதில் ஒன்று தான் கீரமங்கலத்தில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும் என்ற அறிவிப்பு ஆகும். அன்று முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட மற்ற திட்டங்கள் நிறைவேற்ற பணிகள் தொடங்கி உள்ளது. 

Advertisment

அதே போல கீரமங்கலம் குளிர்பதன கிடங்கு அமைக்க முதல்கட்டமாக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிலம் தேர்வு செய்யப்பட்டது குறித்து பேரூராட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் என்று வேளாண்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். தேர்தல் நேரம் நெருங்குவதால் இந்தப் பணியை விரைந்து முடிக்கப் பேரூராட்சி நிர்வாகம் ஒரு தீர்மானம் நிறைவேற்றிக் கொடுத்தால் அடுத்தகட்ட பணிகள் நடக்கும். ஆகவே கீரமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் விரைந்து தீர்மானம் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். இந்த ஒற்றைத் தீர்மானத்தைத் தாமதிப்பதால் திட்டம் முடங்கிவிடக்கூடாது என்கின்றனர் கீரமங்கலம் பகுதி மக்கள்.