Chief Minister called Alankulam senior administrator and spoke at Arivalayam
தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘உடன்பிறப்பே வா’ என்ற நிகழ்ச்சி மூலம் திமுக நிர்வாகிகளை தினமும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அந்த வகையில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஆலங்குளம் தொகுதியின் மூத்த நிர்வாகி முத்துவேலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். மேலும், அவரை சென்னைக்கு வருமாறு அழைத்தார். அதன்படி, இன்று சென்னைக்கு வந்த முத்துவேலை முதல்வர் நேரில் அழைத்துப் பேசி அவருக்கு நினைவுச் சின்னத்தை வழங்கினார். அப்போது முதல்வரிடம், தனது வாரிசுகளுக்கு திராவிடமணி, ஸ்டாலின் என பெயர் வைத்திருப்பதைச் சொல்லி முத்துவேல் பெருமிதம் கொண்டார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக இருந்த போது, அதிகாலை 1:15 மணிக்கு தங்கள் கிராமத்திற்கு வந்து கொடியேற்றியதையும் அவர் நினைவுப்படுத்தினார்.
அதனை தொடர்ந்து, 300 வீடுகள் உள்ள தங்கள் கிராமத்திற்கு மட்டும் இரண்டு முறை வந்துள்ளதாகவும், முதலமைச்சர் செல்லாத கிராமமே இல்லை எனவும் கூறி முத்துவேல் நெகிழ்ச்சிப்படுத்தினார். இதை கேட்ட முதல்வர், ‘அப்போதெல்லாம் இரவு முழுக்க ஊர் ஊராகச் சென்று கொடியேற்றியதையும், அதிகாலையில் பெண்கள் கோலமிடும் போது தன்னுடைய பயணம் தொடர்ந்து கொண்டிருக்கும்’ என்று தனது நினைவலைகளை நினைவுப்படுத்தினார். ஆழங்குளம் தொகுதி தொடர்பான சம்பவங்கள் நேற்றும் இன்றும் அறிவாலயத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டிருக்கிறது.
Follow Us