தாய்மொழியில் படிப்பது கருத்தியல் புரிதலை மேம்படுத்துவதோடு வாழ்வியலையும் வலுப்படுத்துவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் தொடக்கப்பள்ளி முதல் இடைநிலைப்பள்ளி வரை படித்த மராத்தி மொழி நிறுவனமாக சிக்கித்சக் சாமு ஷிரோக்தர் பள்ளிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நேற்று (06-07-25) சென்றிருந்தார். பள்ளியின் வகுப்பறைகள், நூலகம், கலைப் பிரிவை ஆகியற்றவை சுற்றிப் பார்த்த நீதிபதி பி.ஆர்.கவாய், தனது முன்னாள் வகுப்பு தோழர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து தனது குழந்தைப் பருவ நினைவுகளை நினைவு கூர்ந்தார். தனது ஆரம்பகால வாழ்க்கையை வடிவமைத்த ஆசிரியர்களுக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பேசிய பி.ஆர்.கவாய், “நான் மராத்தியில் பேசுவதா அல்லது ஆங்கிலத்தில் பேசுவதா என்ற குழப்பத்தில் இருந்தேன். மேடம் மராத்தியில் பேசுவாரா, ஆனால் புரியாதவர்கள் பலர் இருப்பதாக நான் நினைக்கிறேன். நான் மராத்தியில் பேச வேண்டுமா? அனைவருக்கும் புரியுமா? சரி, மகாராஷ்டிராவில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. நானும் ஒரு மராத்தி வழிப் பள்ளியில் படித்தேன். தாய்மொழியில் படிப்பது, பாடங்களைப் பற்றிய ஆழமான புரிதலுக்கு வழிவகுக்கும். மேலும் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் நிலைத்திருக்கும் வலுவான மதிப்புகளை உருவாக்க உதவுகிறது. நான் ஒரு கட்டிடக் கலைஞராக விரும்பினேன். ஆனால் என் தந்தை எனக்காக வெவ்வேறு கனவுகளைக் கொண்டிருந்தார். அவர் எப்போதும் நான் ஒரு வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்பினார். நான் ஒரு நீதிபதியாக வேண்டும் என்ற என் தந்தையின் கனவு நனவாகியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறி ஆனந்த கண்ணீர் சிந்தினார்.
மேலும் பேசிய அவர், “இன்று நான் எந்த நிலையை அடைந்திருந்தாலும், எனது ஆசிரியர்களும் இந்த பள்ளியும் அதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. இங்கு நான் பெற்ற கல்வியும் மதிப்புகளும், எனது வாழ்க்கைக்கு வழிகாட்டுதலை அளித்தன. பொதுவில் பேசுவதற்கான எனது பயணம் இந்த மேடையில்தான் தொடங்கியது. பேச்சுப் போட்டிகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அந்த வாய்ப்புகளால் தான் நான் இன்று இருக்கிறேன்” என்று பேசினார்.
மகாராஷ்டிரா மாநிலத்திலும் இந்தி மொழிக்கு எதிராக குரல் எழுந்து வருகிறது. மகாராஷ்டிராவில் மராத்தியில் பேசவில்லை என்றால் கன்னத்தில் அறையுங்கள் என்று நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே சில மாதங்களுக்கு பேசியிருந்தார். அவரது பேச்சு, மகாராஷ்டிராவில் பேசுபொருளானது. இதனை தொடர்ந்து, மராத்தி மொழி பேசதாவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரப் போட்டியில் பிரிந்த உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இந்தி திணிப்புக்கு எதிராக ஒன்றாக சேர்ந்திருப்பது அம்மாநில அரசியலில் புதிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்த சூழ்நிலையில், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தாய்மொழியின் சிறப்பை பற்றி பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.