உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து, உச்ச நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு என்ற முறை கடைப்பிடிக்கப்படாமல் பதிவாளர்கள், மூத்த தனி உதவியாளர்கள், உதவி நூலகர்கள், ஜூனியர் நீதிமன்ற உதவியாளர்கள் மற்றும் அறை உதவியாளர்கள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். நீதித்துறையில் பட்டியலின, பழங்குடியின போன்ற சமூகத்தில் பின்தங்கிய வகுப்பினர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பது இல்லை என்ற விமர்சனம் நீண்டகாலமாக இருந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், கடந்த மே 14ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் என்பவர் பொறுப்பேற்றார். பட்டியல் சமூகத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பொறுப்பேற்றவுடன் நீதித்துறையில் நிறைய மாற்றங்கள் நிகழும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, அவரது பதவி காலத்தில் உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பதிவாளர், மூத்த தனி உதவியாளர், நூலக உதவி மேலாளர், ஜூனியர் நீதிமன்ற உதவியாளர்கள் மற்றும் அறை உதவியாளர்கள் போன்ற பணியிடங்களில் பட்டியலின சமூகத்தினருக்கு 15% இட ஒதுக்கீடு, பழங்குடியின சமூகத்தினருக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கி தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உத்தரவிட்டுள்ளார். இந்த இட ஒதுக்கீடு நீதிபதிகளுக்கானது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 23ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்த இந்த நடவடிக்கை, உச்ச நீதித்துறையின் நிர்வாகத்தில் ஒரு முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த நடைமுறை குறித்து கடந்த ஜூன் 24ஆம் தேதியன்று அனைத்து உச்ச நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பதிவாளர்களுக்கும் வெளியிடப்பட்ட ஒரு சுற்றறிக்கையில், `பட்டியலின மற்றும் பழங்குடி சமூகத்தினர்களுக்கான இட ஒதுக்கீடு நடைமுறை ஜூன் 23ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்பதை சம்பந்தப்பட்ட அனைவரின் தகவலுக்காக அறிவிக்க வேண்டும்` என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கொண்ட வந்த இந்த இட ஒதுக்கீட்டு முறையால், நீதித்துறையில் அனைத்து சமூகத்தினருக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு சமூக நீதி நிலைநிறுத்தப்படுகிறது என்பதை காட்டுகிறது.