உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த 2017ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக குற்றங்களைச் செய்பவர்கள், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், குற்றவாளிகள் உள்ளிட்டவர்களின் வீடு மற்றும் கட்டிடங்களை எந்தவித பாரபட்சமும் காட்டாமல் உடனுக்குடன் புல்டோசர்களை கொண்டு இடிக்கும் நடைமுறையை முதல்முறையாக கொண்டு வந்தார். அதன் பின்னர், உத்தரப் பிரதேச அரசின் பாணியை ராஜஸ்தான், அசாம், குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற பா.ஜ.க மாநில அரசுகளும் பின்பற்றியது. இதனால், நாட்டில் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அதிகளவு புல்டோசர் கலாச்சாரம் நடைபெற்றது.
முக்கியமாக, இந்த புல்டோசர் கலாச்சார நடவடிக்கை சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது தான் அதிகளவில் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. ஒருவர் செய்த குற்றத்திற்காக ஒட்டுமொத்த குடும்பத்தையே நடுத்தெருவில் கொண்டு வருவது அநீதி என நாடு முழுக்க கண்டனக் குரல்கள் எழுந்தது. இது தொடர்பான பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டவர்களின் கட்டிடங்கள் உள்பட எந்த கட்டிடத்தையும் நீதிமன்றத்தின் அனுமதி இன்றி இடிக்கக்கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. மேலும், ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் தெரிவித்திருந்தது. இருந்த போதும், சில அதிகாரிகள் கட்டிடங்களை இடிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘குற்றம்சாட்டப்பட நபர்களின் வீடுகளை இடிப்பது அரசியலமைப்பிற்கு விரோதமான செயலாகும். தங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை, அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படக் கூடாது. அதிகாரிகளின் தன்னிச்சை நடவடிக்கைகளை, மன்னிக்க முடியாது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு, மக்களின் உரிமைகளை பாதுகாப்பது அவசியமானதாகும். வீடு என்பது ஒவ்வொருவருக்கும் கனவு ஆகும். அத்தகையை கனவு கலைந்து போய்விடக் கூடாது. வீடுகளை இடித்து அந்த பெண்கள், குழந்தைகள் சாலைகளில் இருப்பது சரியானது அல்ல. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் இருக்கும் சட்டத்தைக் கொண்டு மக்களை காக்க வேண்டும். வீட்டை இடிக்கும் வழங்கும் நோட்டீஸை எதிர்த்து வழக்கு தொடர கால அவகாசம் வழங்க வேண்டும். நீர்நிலைகள் போன்ற சட்டவிரோத ஆக்கிரமிப்பு கட்டுமானங்களுக்கு இந்த தீர்ப்பு பொருந்தாது” எனத் தெரிவித்து புல்டோசர் இடிப்பு நடவடிக்கையை தடுத்தனர்.
இந்த நிலையில், புல்டோசர் நடவடிக்கைக்கு எதிராக அன்றைக்கு அளித்த தீர்ப்பு தான் தனக்கு மிகுந்த மனநிறைவைக் கொடுத்தது என அத்தகைய தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுடான குழுவில் பேசிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “நான் நீதிபதிகள் அமர்வுக்கு தலைமை தாங்கியபோது, ​​நீதிபதி கே.வி. விஸ்வநாதனுடன் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அமர்ந்திருக்க வாய்ப்பு கிடைத்தது. எங்கள் இருவருக்கும் மிகுந்த திருப்தியை அளித்த தீர்ப்புகளில் ஒன்று புல்டோசர் தீர்ப்பு என்று நான் நினைக்கிறேன். இந்தத் தீர்ப்பின் மையமாக இருந்தது மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள். குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் குற்றவாளியாகவோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவராக இருந்தால் குடும்பங்கள் துன்புறுத்தப்படுகின்றன. இந்த தீர்ப்பின் பெரும்பகுதி எனக்கு வழங்கப்பட்டிருந்தாலும், தீர்ப்பை எழுதியதில் சமமான பெருமை நீதிபதி விஸ்வநாதனுக்கும் சேர வேண்டும் என்பதில் நானும் பங்கு கொள்ள வேண்டும்” என்று கூறினார்.