தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் இந்த ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. விரைவில் இதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிராம மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சென்னையில் 2வது நாளாக இன்று (27.02.2026) ஆலோசனை. மேற்கொண்டார்.
இந்நிலையில் இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், “சமீபத்தில், உலகம் முழுவதிலுமிருந்து 72 நாடுகள் பங்கேற்ற ஒரு சர்வதேச மாநாட்டை தேர்தல் ஆணையம் நடத்தியது. இதில் தலைமைத் தேர்தல் ஆணையர்கள், தேர்தல் ஆணையர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் கலந்து கொண்டனர். அங்கு, 10ஆம் நூற்றாண்டு முதல் நடைமுறையில் இருந்த தமிழ்நாட்டின் 'குடவோலை முறை' பற்றி உலகிற்கு தேர்தல் ஆணையம் எடுத்துரைத்தது. தேர்தல் திருவிழா என்பது தமிழ்நாட்டின் பெருமை, அந்தத் திருவிழாவைக் கொண்டாட அனைத்து தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்
நாங்கள் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் தங்கியிருந்து, ஆட்சியர்கள், போலிஸ் எஸ்பிக்கள், டிஐஜிக்கள், ஐஜிக்கள், சுமார் 24 அமலாக்க முகமைகள், மாநில அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோருடன் தேர்தல் தயார்நிலை குறித்து ஆய்வு செய்தோம். தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் 188 பொதுத் தொகுதிகள், 44 பட்டியல் வகுப்பினருக்கான தொகுதிகள் மற்றும் 2 பழங்குடியினருக்கான தொகுதிகள் ஆகும். 2025 அக்டோபர் 27 முதல் 2026 பிப்ரவரி 23 வரை தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணியின் எளிய, நேரடியான, தெளிவான மற்றும் வெளிப்படையான நோக்கம் என்னவென்றால், தகுதியுள்ள எந்த வாக்காளரும் விடுபடக்கூடாது, அதேசமயம் தகுதியற்ற எவரும் சேர்க்கப்படக்கூடாது என்பதே ஆகும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/27/eci-2026-02-27-13-10-52.jpg)
இன்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் 5 கோடியே 67 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் 2 கோடியே 89 லட்சம் பெண் வாக்காளர்களும், 2 கோடியே 77 லட்சம் ஆண் வாக்காளர்களும் உள்ளனர். திருநங்கைகள் 7,617 பேர் மற்றும் மூத்த குடிமக்கள் (81-85 வயதுக்கு மேற்பட்டவர்கள்) சுமார் 4 லட்சம் பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள இந்தத் தேர்தல் இளைஞர்கள் மீது அதிக கவனம் செலுத்துவதாக இருக்கும். கல்லூரிகளில் பிரச்சாரம் செய்ய 3 ஆயிரத்து 60 பிரத்யேக உதவி தேர்தல் பதிவு அதிகாரிகள் இருப்பார்கள். தமிழ்நாட்டில் 18-19 வயதுக்குட்பட்ட 12.5 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களும், 20-29 வயதுக்குட்பட்ட சுமார் 1 கோடி வாக்காளர்களும் இந்தத் தேர்தலைச் சந்திக்க உள்ளனர்
இறந்த வாக்காளர்கள், இடம் பெயர்ந்தவர்கள் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெயர்கள் உள்ளவர்கள் என அதிக எண்ணிக்கையிலானவர்கள் கடந்த கால வாக்காளர் பட்டியலிலிருந்து சரியாக நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சுமார் 75 ஆயிரம் வாக்குச் சாவடிகளுடன் தேர்தலைச் சந்திக்க உள்ளது, இதில் 44 ஆயிரம் கிராமப்புறங்களில் உள்ளன. வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 100% இணையவழி நேரடி ஒளிபரப்பு (Webcasting) வசதி இருக்கும். வாக்காளர்களின் வசதிக்காக, ஒரு வாக்குச் சாவடிக்கு சராசரியாக 756 வாக்காளர்கள் உள்ளனர். இதன் மூலம் வசதியாகவும், தடையற்ற வாக்குப்பதிவும் நடைபெறும். பெண்களால் நிர்வகிக்கப்படும் வாக்குச் சாவடிகள் 258 ஆகவும், மாற்றுத்திறனாளிகளால் நிர்வகிக்கப்படும் வாக்குச் சாவடிகள் 47ஆகவும் இருக்கும். மேலும் தமிழ்நாட்டில் சுமார் 265 மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
Follow Us