கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில் இன்று (31.12.2025 - புதன்கிழமை) கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நந்தனார் கல்விக் கழக தலைவரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான கே.ஐ. மணிரத்னம் தலைமை தாங்கினார். இதில் கல்விக் கழக செயலாளர் ஜெயச்சந்திரன், நிர்வாகிகள் டி.கே.வினோபா, ஐ.என்.டி.யு.சி. மாநில செயலாளர் கஜேந்திரன், மணலூர் ரவி, காங்கிரஸ் கட்சி மாநில இளைஞரணி துணைத் தலைவர் அரவிந்த் மணிரத்தினம், மாநில இளைஞரணி முன்னாள் செயலாளர் கமல் மணிரத்தினம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Advertisment

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மணிரத்னம், “சிதம்பரம் ஓமக்குளம் பகுதி நந்தனார் மடத்தில் சுவாமி சகஜானந்தா அடக்கம் செய்யப்பட்ட சமாதி கோவில் உள்ளது. இங்கு 1994ஆம் ஆண்டு மறைந்த தலைவர் இளையபெருமாள் தலைமையில் கடைசியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது இத்திருக்கோவில் சுமார் 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி மாதம் மிக விமர்சையாக கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்தியாவில் ஆதிதிராவிட மக்களுக்காக இருக்கின்ற கல்வி சேவைக்காக  திறக்கப்பட்ட இந்த மடம் மற்றும் கோயிலுக்கு வருகிற ஜனவரி 28ஆம் தேதியில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. சுவாமி சகஜானந்தா தலித் மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தி தாழ்த்தப்பட்ட மக்கள் குளத்திலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு போராடி உரிமையை வாங்கி தந்தவர்.

Advertisment

அந்த மகானுக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த நந்தனார் மட வளாகத்தை புண்ணிய பூமியாக மாற்ற இருக்கின்றோம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மடத்தில் நந்தனாரின் தியான மண்டபம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதில் நந்தனாரின் வரலாறும், சுவாமி சகஜானந்தா வரலாறும் வைக்கப்படும். இந்த கோவில் கும்பாபிஷேகத்திற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் அனைத்து அதிகாரிகளையும் அழைக்க உள்ளோம். இத்திருக்கோவிலில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, முத்தமிழறிஞர் கலைஞர், இவர்களுடன் 51 தேசிய தலைவர்கள் கிட்டத்தட்ட 10 ஜனாதிபதி வந்து சென்ற இடம் ஆகும். 

கடந்த  1934 இல் இரண்டு நாட்கள் மகாத்மா காந்தி இந்த மடத்தில் தங்கி இருந்துள்ளார். அப்படிப்பட்ட புனிதமான இடத்தை உலகறிய செய்ய வேண்டும் பராமரிப்பு இல்லாமல் இருந்ததை கவனித்த கல்வி கழகம் பராமரிப்பு செய்து 28ஆம் தேதி அன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. சுவாமி சகஜானந்தாவால் நந்தனார் பெயரில் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படுகிறது” எனத் தெரிவித்தார்.

Advertisment