Chidambaram Nandanar Mutt's Kudamuzhu - Thirumavalavan participates Photograph: (cuddalore)
சிதம்பரம் நந்தனார் மடம் குடமுழுக்கு மற்றும் சுவாமி சகஜானந்தாவின் பிறந்தநாளில் அவரது சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சிதம்பரம் அருகே ஓமக்குளத்தில் நந்தனார் மடம் உள்ளது இந்த மடத்திற்கு ஜனவரி 28-ஆம் தேதி காலை மகா குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இந்த விழா ஜனவரி 27-ஆம் தேதி சுவாமி சகஜானந்தாவின் பிறந்தநாளில் தொடங்கியது. இதனையறிந்த பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வருகை தந்து சகஜானந்தாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திச் செல்கிறார்கள்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் 28-ந்தேதி இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் கட்சியினருடன் செவ்வாய்க்கிழமை நந்தனார் மடத்திற்கு வருகை தந்தார். இவரை நந்தனார் கல்விக் கழகத் தலைவர் கே.ஐ.மணிரத்னம் உள்ளிட்ட கல்விக் கழக உறுப்பினர்கள் வரவேற்று சகஜானந்தா சமாதி கோவிலில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்டச் செயலாளர்கள் தமிழ்வளவன், தமிழ்ஒளி உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாயிலில் அமைக்கப்பட்டுள்ள அவரது மணி மண்டபத்திற்கு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்துடன் இணைந்து திருமாவளவன் சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சாமி சகஜானந்தா மணிமண்டபம் ஒருங்கிணைப்பு குழுவினர், நந்தனார் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளியின் முன்னாள், இன்னாள் மாணவர்கள், திமுகவினர்,பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்.
அதேபோல் சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியன். முன்னாள் எம்எல்ஏ முருகுமாறன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், கட்சியினருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மணிமண்டபம் வளாகத்தில் சுவாமி சகஜானந்தா பணிநிறைவு பெற்றோர் சமூக அறக்கட்டளை சார்பில் மருத்துவ முகாம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Follow Us