Chidambaram Government Hospital wins international award
சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனை சர்வதேச மருத்துவ பயனாளிகள் பாதுகாப்பு சங்க கருத்தாய்வில், மகப்பேறு மருத்துவத்தில் செவிலியர்கள் மேலாண்மைக்கான சிறந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசால் சிறந்த மகப்பேறு மருத்துவர் விருது பெற்ற சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனை மருத்துவர் கே.ராகுல் ஆனந்து இன்று (03-02-26) செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘கடந்த ஜனவரி 30-ம் தேதி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சர்வதேச மருத்துவ பயனாளிகள் பாதுகாப்பு சங்கத்தின் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 29 வல்லரசு நாடுகளில் இருந்து 800 மருத்துவமனைகள் பங்கேற்றுள்ளன.
மேற்கண்ட நாடுகளில் மருத்துவத்துறையில் நடைபெற்ற மிகச்சிறப்பான சிகிச்சைகள் குறித்து கருத்தாய்வு செய்தனர். இதில் மகப்பேறு மருத்துவத்தில் செவிலியர்கள் மேலாண்மை என்ற தலைப்பில் கருத்தாய்வில் தமிழகத்தில் உள்ள சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையை தேர்வு செய்து சர்வதேச அளவில் சிறந்த விருது வழங்கியுள்ளனர். இந்த விருதை சூடான் நாட்டைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர், சிதம்பரம் அரசு மருத்துவமனை மருத்துவர் ராகுல் ஆனந்து, செவிலியர் புஷ்பலதா பெரியநாயகம், அறுவை அரங்க செவிலியர் புவனேஸ்வரி லோகநாதன் ஆகியோரிடம் வழங்கினர். இது பிரசவத்திற்கு பிறகு ஏற்படுகிற உதிரப்போக்கு மகப்பேறு மரணங்களுக்கான முதன்மையான காரணமாக உள்ளது.
சிதம்பரம் அரசு மருத்துவமனையில் ஆண்டுக்கு 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்றாலும் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக உதிரப்போக்கினால் மரணங்கள் ஏற்படவில்லை. இதற்கு முழுமுதல் காரணமாகவும், முதுகெலும்பாகவும் உள்ள செவிலியர்கள் தான். மருத்துவர்களாகி நாங்கள் பல்வேறு பணியில் இருந்தாலும், பிரசவத்திற்கு வரும் மகளிர்களை உன்னிப்பாக கவனித்து உதிரம் போவது தொடங்கும் போதே கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிப்பதால் மரணங்கள் தவிர்க்கப்படுகிறது. தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் வழிகாட்டுதல்படி தேசிய சுகாதார திட்ட இயக்குநர் மருத்துவமனையை ஆய்வு செய்து ரூ.1.50 கோடி மதிப்பிலான உயரிய மருத்துவ உபகரணங்களை வழங்கி இந்த சேவை தொடர ஆணை பிறப்பித்துள்ளார்கள். இந்த விருதினை செவிலியர்கள் சமூகத்திற்காகவும், மருத்துவமனையில் பயன் பெற்ற தாய்மார்களுக்கும் அர்ப்பணிக்கிறோம்’ என மகப்பேறு மருத்துவர் கே.ராகுல் ஆனந்து தெரிவித்தார். இதனை அறிந்த சக மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மருத்துவர் உள்ளிட்ட அவரது குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
Follow Us