புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரண்மனைக்கொல்லை பகுதியைச் சேர்ந்த விவசாயி துரைப்பாண்டியன். இவரின் தோட்டத்தில் அடுத்தடுத்து 60 கோழிகள் காணாமல் போனதால் கோழிகளை விலங்குகள் தூக்கிச் செல்கிறதா? அல்லது யாரேனும் திருடுகிறார்களா? என்பதை பார்க்க சிசிடிவி கேமரா பொறுத்தியுள்ளார். இந்த நிலையில் தான் கடந்த செப்டம்பர் 22 ந் தேதி இரவு ஒரு நபர், கோழிகளை திருட வந்துள்ளது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி விவசாயி துரைப்பாண்டியன் செல்போனுக்கு எச்சரிக்கை செய்துள்ளது. கேமரா பதிவுகளை செல்போனில் பார்த்துவிட்டு உடனே தோட்டத்திற்கு சென்று பார்த்தால் யாரையும் காணவில்லை. ஆனால் கோழிகளும் திருடப்படவில்லை. அப்போது கேமரா பதிவுகளைப் பார்த்த போது கோழி திருட வந்த நபர், கூழியை அடைத்திருக்கும் கூடையை தூக்கும் போது கண்காணிப்பு கேமரா தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் கோழிகள் திருடாமலேயே திரும்பிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இந்த சிசிடிவி பதிவுகள் படங்களை வைத்து நக்கீரன் இணையத்தில் செய்தி மற்றும் வீடியோ வெளியிட்டிருந்தோம். இந்த செய்தியை அடுத்து அந்த நபர் யார்? என்பதை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த நபர் திருநாளூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பதும், இவர் மீது பல வழக்குகள் உள்ளது என்பதும், வடகாடு காவல் நிலையத்தில் ஒரு வழக்கில் வாரண்டும் உள்ளது என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. அதே போல நக்கீரன் இணையத்தில் வெளியான செய்தியில் உள்ள படத்தை வைத்து அறந்தாங்கி போலீசார் கோழி திருடன் விஜய் வீட்டை தேடி அடையாளம் பார்த்துள்ளனர்.
கோழி திருடன் விஜய், அறந்தாங்கியில் இருப்பதை அறிந்த வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று பிடித்து வந்து தங்கள் காவல் நிலைய திருட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நீதிமன்ற பிரப்பித்த வாரண்டுக்காக தூக்கி வந்தனர்.இந்த தகவல் அறிந்து 60 கோழிகளை பறிகொடுத்த விவசாயி துரைப்பாண்டியன் கொடுத்த புகாருக்கு கீரமங்கலம் போலீசார் கோழி திருடன் விஜய் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
அதன் பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், 'திருநாளூர் கிராமத்தைச் சேர்ந்த நான் சின்ன வயதில் இருந்தே திருடப் பழகிட்டேன். பல முறை சிறைக்கும் போய் வந்தாச்சு. ஆள் இல்லாத இடங்களில் உள்ள பொருளை திருடுவேன். இப்ப சில வருடங்களாக திங்கள் கிழமை இரவில் மட்டும் ஒதுக்குப்புறமாக உள்ள தோட்டங்களுக்கு போய் கோழிகளை திருடி விடியும் முன்பே அறந்தாங்கி போய் சந்தையில் வித்துடுவேன். துரைப்பாண்டி தோட்டத்திற்கு பல முறை வந்து கோழி பிடிச்சிருக்கேன். இப்ப வந்து கோழிக் கூடையை திறந்து பார்த்தப்ப போன முறை தாய் கோழியை பிடிச்சுக்கும் விட்டுட்டுப் போன குஞ்சுகள் தான் நின்றது. ரொம்ப குஞ்சுகளா இருக்கேன்னு யோசிச்சு மேலே பார்க்கும் போது தான் கேமரா தெரிந்தது. அதில் என் முகம் தெளிவா பதிவானதால இப்ப சிக்கிட்டேன்' என்று கூறியுள்ளான் திங்கள் கிழமை கோழி திருடன். அவரது கதை கேட்ட பிறகு அவரை அவநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பி உள்ளனர் கீரமங்கலம் போலீசார்.