சத்தீஸ்கர் மாநிலம் காரியாபந்த் என்ற இடத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில்  தேடப்பட்டு வந்த முக்கிய நபரான மனோஜ் உட்பட 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இது தொடர்பாக ராய்ப்பூர் சரக ஐஜி அம்ரேஷ் மிஸ்ரா கூறுகையில், “காரியாபந்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது.  இன்று நடைபெற்ற மோதலில் நக்சல்கள் இறந்திருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சத்தீஸ்கரில், மத்திய  பாதுகாப்புப் படையினரின் (CRPF) கோப்ரா கமாண்டோக்கள், சத்தீஸ்கர் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டு, ₹1 கோடி பரிசுத் தொகையாக வைத்திருந்த பாலகிருஷ்ணா என்கிற மனோஜ் உட்பட 10  நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். மீதமுள்ள நக்சலைட்டுகள் உரிய நேரத்தில் சரணடைய வேண்டும். மார்ச் 31ஆம் தேதிக்குள் நக்சலைட்டுகள் (சிவப்பு பயங்கரவாதம்) முற்றிலுமாக ஒழிக்கப்படுவது உறுதி” எனத் தெரிவித்துள்ளார்.