செஸ் வீராங்கனை வைசாலி உள்ளிட்ட 4 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு பணிக்கான பணி நியமன ஆணைகளை இன்று (22.09.2025) வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “சர்வதேச அளவில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய மற்றும் தேசிய, மாநில அளவில் சிறந்து விளங்கிய விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவிகித விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் அரசுத் துறைகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சதுரங்க விளையாட்டு வீராங்கனை ஆர். வைஷாலிக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் இளநிலை அலுவலர் (தரம் III) பணியிடத்திற்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதே போன்று கால்பந்து வீராங்கனை கே. சுமித்ராவுக்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் கணக்காளர் பணியிடத்திற்கும், கூடைப்பந்து வீராங்கனை எஸ். சத்யாவுக்கு தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தில் மார்க்கெட்டிங் நிர்வாகி பணியிடத்திற்கும், பாய்மர படகு போட்டி வீரர் பி. சித்ரேஷ் தத்தாவுக்கு சிப்காட் நிறுவனத்தில் உதவி அலுவலர் பணியிடத்திற்கும் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
சீனாவின் ஹாங்ஷோவில் நடைபெற்ற 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2வது இடம் பெற்றவர் சதுரங்க விளையாட்டு வீராங்கனை ஆர். வைஷாலி ஆவார். நேபாள நாட்டின் போக்ராவில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் முதல் இடம் பெற்ற கால்பந்து வீராங்கனை கே. சுமித்ரா ஆவார். நேபாள நாட்டின் போக்ராவில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் முதல் இடம் பெற்ற கூடைப்பந்து வீராங்கனை எஸ். சத்யா ஆவார். சீனாவின் ஹாங்ஷோவில் நடைபெற்ற 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற பாய்மர படகு போட்டி வீரர் பி. சித்ரேஷ் தத்தா ஆவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 4 விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் எனப் பலரும் கலந்துகொண்டனர்.