‘ஆட்டோகிராப்’, ‘தவமாய் தவமிருந்து’ போன்ற படங்களை இயக்கி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் இயக்குநர் சேரன். இவர் கடைசியாக திருமணம் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். அதன் பின்னர், ‘ஜர்னி’ என்ற வெப் தொடரை இயக்கியிருந்தார். இந்த தொடர், சோனில் லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிக்கும் புதிய படத்தை சேரன் இயக்குவதாகத் தகவல் வெளியானது. ஆனால், அந்த படம் குறித்த எந்த தகவலும் இதுவரை வரவில்லை.
இந்த படத்தை அடுத்து, தமிழக அரசியல் தலைவரான பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கவுள்ளதாக முன்பு தகவல் வெளியாகி வந்தது. இந்த படத்தில் ராமதாஸ் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், தான் சரத்குமாரை வைத்து மற்றொரு படம் இயக்கவுள்ளதாகவும், அந்த படம் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு படம் இல்லை என்று சேரன் உறுதிப்பட தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இயக்குநர் சேரன் இயக்கும் ராமதாஸ் வாழ்க்கை வரலாற்று படத்தின் போஸ்டரில் வெளியாகியுள்ளது. ராமதாஸின் 87வது பிறந்தநாளை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. ராமதாஸ் கதாபாத்திரத்தில் நடிகர் ஆரி நடிக்கும் இப்படத்திற்கு ‘அய்யா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழ்குமரன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் போஸ்டரில் ‘இன விடுதலைக்கான போராட்டத்தின் வரலாறு 1987’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி கடந்த 1987ஆம் ஆண்டு ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கம் சார்பில் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் வன்முறையாக மாறி 21 போராட்டக்காரர்கள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதன் பின்னர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு வன்னியர்கள் உட்பட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது. ராமதாஸ் நடத்திய இந்த போராட்டத்தின் அடிப்படையாகக் கொண்டு சேரன் இயக்கும் ‘அய்யா’ படம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.