Chennai under strict surveillance Car explosion incident in the delhi red fort
தலைநகர் டெல்லியின் முக்கிய சுற்றுலாத் தளமான செங்கோட்டை மெட்ரோ முதலாவது நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்து சிதறிய சம்பவம் டெல்லி மட்டுமல்லாது நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பயங்கர சம்பவத்தில், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஹரியானாவில் வெடிபொருட்களுடன் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதால் வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால், இந்த சம்பவம் விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில், டெல்லி போலீசார், என்.ஐ.ஏ, என்.எஸ்.ஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தியதோடு மட்டுமல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி உயர் அதிகாரிகளிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த பயங்கர சம்பவத்தின் எதிரொலியாக சென்னை மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில்வே நிலையன், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே உத்தரப் பிரதேசம், மும்பை ஆகிய மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Follow Us