‘எனது மரணம் உங்களது சாம்ராஜ்யத்தை அசைத்துப் பார்க்கும்...’ என்று திருமலா பால் நிறுவன மேலாலர் கடிதம் அனுப்பி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் நவீன் பொல்லினேனி (37). கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்தார். அண்மையில், பால் நிறுவனத்தில் கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்து 44.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நவீன் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக நிறுவன அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், நவீன் 5 கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுத்ததாகவும், மீதித் தொகையை விரைவில் செலுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக நிறுவனம் தரப்பில் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாதவரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணைக்காக நவீன் பொல்லினேனியை காவல்துறையினர் தொடர்பு கொண்டு பேசியபோது, "நாளை விசாரணைக்கு வருகிறேன், பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்," என்று கூறி தொடர்பைத் துண்டித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, விசாரணைக்கு அஞ்சிய நவீன் பொல்லினேனி, தான் வாங்கியிருந்த நிலத்தில் உள்ள குடிசையில் கடந்த 9-ம் தேதி இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, நவீன் பொல்லினேனி தற்கொலை செய்வதற்கு முன்பு, பால் நிறுவன அதிகாரிகளுக்கும், தனது சகோதரிக்கும் மின்னஞ்சல் மூலம் மரண வாக்குமூலமாக ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில், ‘நரேஷ் மற்றும் முகுந்த் ஆகியோர் என்னைச் சந்தித்து, மோசடி செய்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தாலும் ஜெயிலில் இருக்க வேண்டியிருக்கும் என்று மிரட்டினர். இதனால் அச்சமடைந்து தற்கொலை செய்ய முடிவெடுத்தேன். புகார் அளிக்க முடிவு செய்ததால், எனது எதிர்காலத்தை எண்ணி பயந்து இந்த முடிவுக்கு வந்தேன். எனது தற்கொலைக்கு திருமலா பால் நிறுவன நிர்வாகமே காரணம். மோசடி விவகாரம் வெளியே தெரிந்த பிறகு, அதைச் சரி செய்ய முதல் கட்டமாக கடந்த 26-ம் தேதி 5 கோடி ரூபாயைத் திருப்பிச் செலுத்தினேன். மீதித் தொகையை மூன்று மாதங்களில் செலுத்துவதாக உறுதியளித்தேன். இந்த மோசடியில் எனக்கு மட்டுமே தொடர்பு உள்ளது; வேறு யாருக்கும் தொடர்பில்லை. பணம் கைமாறப்பட்ட நான்கு கணக்குகளில் இருந்த மொத்தப் பணமும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
மோசடி குறித்து நிறுவன அதிகாரிகள் புகார் அளிக்க வேண்டாம். ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று கூறினேன். ஆனால், நிறுவன அதிகாரிகள் தொடர்ந்து என்னை மனரீதியாகத் துன்புறுத்தினர். எனது சடலத்தில் இருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். இப்போது உங்களால் எதையும் மீட்க முடியாது. எனது சடலத்தை அலுவலக வாசலில் வைத்து பணத்தை வசூலித்துக் கொள்ளுங்கள். பால் நிறுவனத்தில் பல மோசடிகள் நடைபெற்று வருகின்றன. எனது மரணம் உங்களது சாம்ராஜ்யத்தை விரைவில் அசைத்துப் பார்க்கும்’ என்று தெரிவித்திருக்கிறார். இந்த கடிதத்தின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்க இன்று (12-07-25) சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “திருமலா நிறுவன மேலாளர் நவீன் மரணம் தற்கொலை போன்று தான் உள்ளது. அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்ததில் தற்கொலை என்றே தெரிகிறது. நவீனை காவல் துணை ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து விசாரிக்கவில்லை. நவீன் அனுப்பிய மின்னஞ்சலில் காவல்துறை மிரட்டியதாக எங்கும் குறிப்பிடவில்லை. காவல் துணை ஆணையர் பாண்டியராஜனுக்கு விடுமுறை கொடுத்தது நான் தான். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.