சென்னை கொளத்தூர் மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் ரவுடி ஆதி என்ற ஆதி கேசவன் (20). ராஜமங்கலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி ஆதி மீது ஒரு கொலை வழக்கு, அடிதடி உட்பட 9க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. ரவுடி ஆதியும் வில்லிவாக்கம் பொண்ணாங் கிணறு தெருவை சேர்ந்த சாருமதி (வயது 23) என்பவருடன் தவறான உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சாருமதிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் உள்ள நிலையில் இவர் ரவுடியுடன் தகாத உறவில் இருந்து வந்தாக கூறப்படுகிறது. நேற்று இரவு சாருமதி தனது ஆண் நண்பர் ரவுடி ஆதியை செல்போனில் தொடர்பு கொண்டு தனது தோழியான ஆவடி ஏரிக்கரை பகுதியை சேர்ந்த சுசித்ரா (வயது 21) என்பவருக்கு கடந்த 18 ஆம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்தது என்றும் குறைப்பிரசவத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு திடீரென அந்த உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று இரவு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தன் தோழி சுசித்ராவுக்கு யாரும் ஆதரவு இல்லாததால் அவருடன் மருத்துவமனையில் தங்கி இருப்பதாகவும் நீ உடனே மருத்துவமனைக்கு வருமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. பெண் தோழி சாருமதி கேட்டுக் கொண்டதன் பேரில் ரவுடி ஆதி இரவு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றதாக தெரிகிறது. அங்கு ஆதிக்கு மது வாங்கி கொடுத்தும் பெண் தோழியும் மது அருந்தி மதுபோதையில் தன்னுடன் தூங்க வைத்துள்ளார் சாருமதி. கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு வார்டு புதிய கட்டிடத்தின் பின்புறம் அருகே ரவுடி ஆதி தன் பெண் தோழி மற்றும் சுசித்தரா ஆகியோர் தூங்கி கொண்டிருந்த நிலையில் இன்று அதிகாலையில் அங்கு வந்த அடையாளம் தெரியாத தலைக்கவசம் அணிந்து வந்த கும்பல் ஆதியை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
மருத்துவமனையில் புகுந்து ரவுடியை வெட்டியதில் ரத்தம் சுவற்றிலும், அருகில் இருந்தோர் மீது சிதறியுள்ளது. ஆதியின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தலைத்தெறிக்க ஓடினர். கொலை செய்த இடத்திற்கு 50 மீட்டர் தூரத்தில் மருத்துவமனை வளாகத்திலே உள்ள காவல்நிலையத்தில் சென்று காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் கீழ்பாக்கம் மருத்துவமனை போலீசார் விரைந்து சென்று ரவுடி ஆதி உடலை அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்ற போது அவர் உயிர் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/12/siren-police-2026-01-12-17-51-29.jpg)
கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொல்லப்பட்ட ஆதியின் தாயார் மற்றும் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். அப்போது ஆதியின் உறவினர்கள் கதறி அழுதனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிறந்த ரவுடி ஆதியை அதே மருத்துவமனையிலேயே கொலை செய்து விட்டதாக கண்ணீர் விட்டு கதறியபடி அவரது பெரியம்மா கூறியுள்ளார். ஆதியின் பெரியம்மா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இன்று நீதிமன்றத்தில் ஆதி கையெழுத்திட வேண்டும். அதற்குள் கொலை செய்து விட்டனர். என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டார் என்ற எந்த தகவலும் தெரியவில்லை. காவல்துறை விசாரித்து வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் இருக்கும் பகுதியான கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள்ளேயே புகுந்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்று கண்ணீரோடு தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஆதி கொலை செய்யப்பட்ட இடத்தில் சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் நரேந்தின் நாயர் ஆய்வு செய்தார். இணை ஆணையர் பண்டிட் கங்காதர், மருத்துவ கல்லூரி நிலைய மருத்துவ அலுவலர் (RMO) வாணி மற்றும் மருத்துவ அதிகாரி பாஸ்கர் ஆகியோரிடம் பாதுகாப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “இந்த கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளோம். கடந்த டிசம்பர் மாதம் ஆவடியைச் சேர்ந்த பெண் தோழி ஒருவருக்கு குறைபிரசவத்தில் குழந்தை பிறந்து இறந்து விட்டதால் மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் பிரச்னை செய்ததாக தெரிகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/12/inves-1-2026-01-12-17-51-44.jpg)
இதன் பிறகு தான் தனது தோழியுடன் வந்த ஆதி மேலும் 3 பேருடன் சேர்ந்து மருத்துவமனையின் வளாகத்தின் வெளிப்பகுதியில் மது குடித்து விட்டு பிறகு தூங்க வந்தார். அப்போது கொலை நடந்துள்ளது. ராஜமங்கலம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி தான் ஆதி. இந்த வழக்கில் இரண்டு நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். 2 பெண்கள் மற்றும் நான்கு பேர்களை சந்தேக முறையில் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று பணியில் இருந்த காவல்துறையினர் மீது நிச்சயமாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற செயல்கள் நடத்தப்பட்டதில் பொதுமக்கள் உடனடியாக காவல்துறையுடன் தகவல் தெரிவிக்க வேண்டும்" என்று கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் தெரிவித்துள்ளார்.
மேலும் காவல் துறை கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர், “முதற்கட்ட விசாரணையில், ரவுடி ஆதி, பிரபல ரவுடி விக்கி என்ற அமாவாசை என்பவரின் கூட்டாளி என்பதும் 2022 ஆம் ஆண்டு கொளத்தூர் மகாத்மா காந்தி நகரில் ரவுடி பழனி என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் ரவுடி ஆதியை போலீசார் கைது சிறையில் அடைத்ததும் தெரியவந்தது. பின் ஜாமினில் வெளியே வந்த ரவுடி ஆதி கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சக ரவுடியான ஆட்டோ கணேஷ் என்பவருக்கும் ரவுடி ஆதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரவுடி ஆதி கோயம்பேடு பகுதியில் வைத்து ஆட்டோ கணேசை கொலை செய்ய முயன்றது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் மருத்துவமனையில் கள்ளக்காதலியுடன் தூங்கி கொண்டிருந்த ரவுடி ஆதியை வெட்டி கொன்ற கும்பலுக்கு உதவியாக ஆதியின் நண்பர்கள் சூர்யா, அலிபாய், கார்த்திக் ஆகியோர் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/12/siren-arrested-2026-01-12-17-52-00.jpg)
உயிரிழந்த ரவுடி ஆதியின் உறவினர் பெருமாள் கூறுகையில், நேற்று ரெட்டேரியில் உள்ள ஒரு பையன் ஆதியை மருத்துவமனைக்கு கூட்டி வந்ததாகவும், பின்னர் ஒரு கும்பல் ஸ்கெட்ச் போட்டு அவனை கொலை செய்து விட்டதாகவும் தெரிவித்தனர். சில நாட்களுக்கு முன்பு தான் ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு ஆதி வந்ததாகவும் மருத்துவமனைக்கு அந்த நபர் கூட்டிட்டு வந்ததன் பேரில் இந்த சம்பவம் அரங்கேற்பதாகும் அவர் சுட்டிக் காட்டினார். ஆதி ஒரு பாப்பாவுடன் பேசிக்கொண்டு இருந்ததாகவும் , இங்க வந்து மாட்டின பிறகு அவனை படுகொலை செய்து விட்டார்கள் என்றும் கூறினார்.
கொலை செய்து தப்பியோடிய கும்பலை பிடிக்கபோலீசார் 9 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், லேபர் வார்டு மற்றும் மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவமனையிலேயே ரவுடியை ஹெல்மெட் அணிந்து கொண்டு ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவரை நோயாளி கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள்ளே புகுந்து நடந்த கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/12/kolathur-adhi-2026-01-12-17-50-21.jpg)