நடப்பாண்டு தீபாவளியானது வார இறுதியின் தொடர்ச்சியாக வரும் திங்கட்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வெள்ளிக்கிழமை மாலையிலிருந்தே பலரும் சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்க தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் நேற்று மாலையே பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. குறிப்பாக நேற்று பாடி பகுதியில் உள்ள பிரபல துணிக்கடை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தீபாவளி ஆடைகள் வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்ததால் பாடி பகுதியில் மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டது.
அந்த பகுதியில் போக்குவரத்தை சீர் செய்ய போக்குவரத்து காவலர்கள் இல்லை என குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. போலீசார் இல்லாததால் நெரிசலில் சிக்கிய பொதுமக்கள் நெரிசலை தவிர்க்க முடியாமல் தங்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொள்வது போன்ற நிகழ்வுகளும் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றும் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சீர் செய்ய காவலர்கள் இல்லாத நிலையே இருப்பதாக வாகன ஓட்டிகளும்,பொதுமக்களும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். கவனிக்குமா காவல்துறை?