Chennai High Court quashes case against Adhav Arjuna at post on karur stampede incident
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்திருந்தனர். இதற்கு எதிர்வினையாற்றும் வகையில், த.வெக. பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கரூர் துயர சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டிருந்தார். அதில் அவர், இலங்கை, நேபாளம் போல அரசுக்கு எதிராக புரட்சி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த பதிவு சர்ச்சையான நிலையில், சில நிமிடங்களிலேயே அந்த பதிவை நீக்கினார். இருப்பினும், இளைஞர்களை தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் ஆதவ் அர்ஜுனாவை கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். மேலும், திமுக எம்.பிக்களான கனிமொழி, ஆ.ரசா ஆகியோர் சர்ச்சைக்குரிய பதிவுக்காக ஆதவ் அர்ஜுனாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து, கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு வெளியிட்டதாகக் கூறி ஆதவ் அர்ஜுனா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதையடுத்து, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஆதவ் அர்ஜுனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அதன்படி, கடந்த 5ஆம் தேதி விசாரணைக்கு வந்த ஆதாவ் அர்ஜுனா தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு ஆஜராகி, ‘கரூர் சம்பவத்திற்கு பிறகு பதிவிட்ட அந்த பதிவு 34 நிமிடங்கள் மட்டுமே சமூக வலைத்தள பக்கத்தில் இருந்தது. இதனால் எந்த விதமான சட்ட ஒழுங்கு பிரச்சனையோ அல்லது எந்த விதமான சமூக பிரச்சனையும் ஏற்படவில்லை. சம்பந்தப்பட்ட பதிவை உடனே நீக்கி விட்டார். ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்படாமலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என வாதிட்டார்.
அதனையடுத்து காவல்துறை தரப்பில் தெரிவித்ததாவது, ‘கரூர் சம்பவம் நடைபெற்ற பொழுது அங்கிருந்து ஆதாவ் அர்ஜுனா தலைமறைவாகிவிட்டார். அந்த சம்பவத்திற்கு அவரும் பொறுப்பாகிறார். தலைமறைவாகிவிட்டு அடுத்த நாள் இதுபோன்ற பதிவுகளை பதிவு செய்துள்ளது சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு இருந்தது. பதிவை நீக்கிவிட்டாலும் கூட ஒரு லட்சம் பேர் அந்த பதிவை பார்த்து விட்டனர். தவறான குறுஞ்செய்தியை பார்வர்ட் செய்தாலே குற்றம் என பல உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உள்ளது. எனவே இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்பக் கட்ட விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. அதுமட்டுமில்லாமல் அவருக்கு சம்மன் அனுப்பியும் கூட ஆஜராகவில்லை’ என வாதிடப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (21-11-25) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆதவ் அர்ஜுனாவின் வாதத்தை ஏற்றுக்கொண்டு அவர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Follow Us