தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

Advertisment

இதற்கிடையில், அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு புதிய விதிகளை வகுக்கக் கோரியும்,  சிபிஐ விசாரணை கோரியும், சில இழப்பீடு வழங்கக் கோரியும்  உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த 3ஆம் தேதி நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிமணி ஆகியோர் அமர்வு முன்பு வந்தது. அப்போது  நீதிபதிகள், ‘பொதுக்கூட்டம் தவிர்த்து எந்த கூட்டமாகினும், மாநில தேசிய நெடுஞ்சாலைகள் அருகே நடத்தப்படக் கூடாது. பொதுக்கூட்டங்களின் போது குடிநீர், மருத்துவம், ஆம்புலன்ஸ், கழிவறை போன்ற அடிப்படை தேவைகளை செய்து தரப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று கடுமையாக உத்தரவிட்டனர்.

Advertisment

அதே போல், அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரும், அதுவரை எந்த கட்சிகளுக்கும் ரோட் ஷோ-க்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் குமார், அரசியல் கட்சிகளின் ரோட் ஷோக்களுக்கு தமிழக அரசு வழிமுறைகளை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த நிலையில், அரசியல் கட்சிகளுடைய கூட்டங்களுக்கு விதிமுறைகளை ஒதுக்கக்கூடிய வழக்கு விசாரணை இன்று (27-10-25) சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தவெக சார்பில், கட்சி கூட்டங்களுக்கு ஒரு நாள் முன்னர் தான் அனுமதி வழங்கப்படுகிறது என்றும் காவல்துறை உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என்றும் வாதிடப்பட்டது. மேலும், அரசு ஒவ்வொரு கட்சிகளுக்கும் பாரபட்சத்தோடு அனுமதி வழங்கப்படுவதாகவும் தவெக சார்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. அப்போது தமிழக அரசு சார்பில், ‘வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்கும் வரைக்கும் எந்த அரசியல் கட்சிக்கும் ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

அதற்கு நீதிபதிகள், ‘விதிகளை உருவாக்கும் வரை எந்த கட்சிக்கும் அனுமதி வழங்கப்படாது என்று கூறுவதன் மூலம் அரசியல் கட்சியுடைய அடிப்படை உரிமையை பறிப்பது ஆகாதா? ஏன் இது போன்ற ஒரு முடிவு எடுத்துள்ளீர்கள்?.’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு, ‘எந்த கட்சியும் பொதுக்கூட்டம் நடத்துவதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால், ரோடு ஷோவில் பெரிய அளவில் கூட்டம் கூடுவதால் அதை மட்டும் தற்காலிகமாக விதிமுறை உருவாக்கும் வரை நாங்கள் நிறுத்தி வைத்துள்ளோம்’ என்று பதிலளிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘விதிமுறைகளை விரைவில் வகுக்க வேண்டும், விதிமுறைகளை வகுக்காவிட்டால் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்’ எனத் தெரிவித்தனர்.

அதற்கு ‘காவல்துறை, மாநகராட்சி மற்றும் மருத்துவ நல்வாழ்வுத்துறை ஆகிய துறைகளோடு இணைந்து கலந்து ஆலோசித்த பிறகு தான் விதிமுறைகளை வகுக்க முடியும். எனவே அதற்குரிய கால அவகாசம் வழங்க வேண்டும்’ என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 10 நாட்களுக்குள் விதிமுறைகளை சமர்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை வரும் நவம்பர் 11ஆம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.