Chennai High Court orders Hostels are not commercial buildings
மாணவ, மாணவியர் மற்றும் வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்களுக்கான ஹாஸ்டல்கள், வணிக கட்டிடங்கள் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாணவ மாணவியர் மற்றும் வேலைக்கு செல்லும் ஆண்கள் பெண்களுக்கான விடுதிகள், வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரி செலுத்த வேண்டும் என்று சென்னை, கோவை மாநகராட்சி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று விடுதி உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று (11-11-25) விசாரணைக்கு வந்தது. அப்போது, விடுதிகளுக்கு வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரி விதிப்பதால் அதனை விடுதியில் தங்கியுள்ளோரிடம் தான் வசூலிக்க நேரிடும் என விடுதி உரிமையாளர்கள் சார்பில் வாதம் வைக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கும் நிலையில் இல்லாதவர்கள் தான் இது போன்ற விடுதிகளில் தங்குகிறார்கள்.
எனவே, விடுதிகள் குடியிருப்பு கட்டிடங்கள் தானே தவிர வணிக கட்டிடங்கள் என கருத முடியாது’ என்று தெரிவித்து விடுதிகள் வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், விடுதிகளிடம் குடியிருப்பு கட்டிடங்களுக்கான வரியை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவையும் நீதிபதி பிறப்பித்தார்.
Follow Us