Chennai High Court order Seeman temporarily banned from speaking against DGG Varunkumar
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் வருண் குமார் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். இவர் பதவி உயர்வு பெற்று திருச்சி மத்திய மண்டல டி.ஐ.ஜி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார். இதனிடையே, இவர் நாம் தமிழர் கட்சி மீது பல்வேறு விமர்சனங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் முன் வைத்து வருகிறார். மேலும் சீமானும், டி.ஜி.ஜி வருண்குமார் மீது தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
இத்தகைய சூழலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, வருண் குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், தன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து அவதூறு தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய வருவதால், தானும் தன் குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், சீமான் மீது குற்ற நடவடிக்கை எடுப்பதுடன் ரூ. 2 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் தனது மனுவில் வருண் குமார் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு, நீதிபதி பாலாஜி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/02/varunkumarseeman-2025-08-02-17-12-17.jpg)
இதனிடையே, , தனக்கு எதிராக பொது வெளியில் சீமான் அவதூறு கருத்துக்களை தெரிவிப்பதால் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் தனக்கு எதிரான அவதூறான கருத்துக்களை தெரிவிக்க சீமானுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், சீமான் இதுபோன்று அவதூறு கருத்துக்களை தெரிவிப்பதால் ரூ.2.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு முன்பு இன்று (02-08-25) விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், ‘ இந்த வழக்கு எண்ணிடும் நிலையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் வழங்காமல் தற்போது எந்த ஒரு இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது. மேலும், மதுரை அமர்வில் அவதூறு வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது’ என்று வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி குமரேஷ, திருச்சி சரக டி.ஜி.ஜி வருண்குமாருக்கு எதிராக சீமான் பேச இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த மனு தொடர்பாக சீமான் பதிலளிக்க வேண்டும் என்று கூறி, இந்த வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.