பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்குத் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி (16.06.2025) மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே இந்த போராட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில், அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் தூய்மைப் பணியாளர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார் குண்டுகட்டாகத் தூக்கி கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரபட்டது. அந்த வழக்கின் விசாரணை நீதிபதி சுரேந்தர் முன்பு இன்று (20-08-25) வந்தது. அப்போது தூய்மை பணியாளர்கள் தரப்பில் வாதிட்டதாவது, ‘சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால் 2,000 தூய்மைப் பணியாளர்களின் வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. 15 ஆண்டுகளாக பணியாற்றியவர்களை குப்பைகளைப் போல் தூக்கி எறியக்கூடாது. பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் வழங்கக் கோரியும் அளிக்கப்பட்ட விண்ணப்பம் தற்போது தொழிலாளர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது, தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க முடியாது. அதற்கு தொழிலாளர் நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும். ஒரு மாதத்தில் தொழிலாளர் நீதிமன்றம் முடிவெடுக்கட்டும், அதன் பின்னர் இறுதி முடிவு எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில், ‘தூய்மைப் பணியாளர்களை தூக்கி எறியப்போவதில்லை. வேலையை விட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள். ஒப்பந்ததாரர்கள் மூலமாக வேலைகள் வழங்கப்படும். குறிப்பாக சென்னை மாநகராட்சியின் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 11 மண்டலங்களின் தூய்மைப் பணிகளை ஏற்கெனவே தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டுவிட்டது. 5 மற்றும் 6வது மண்டலங்களில் தான் தனியாருக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 2,000 தூய்மை பணியாளர்களுக்கும் ஒப்பந்த நிறுவனம் ஊதியம், வருங்கால வைப்பு நிதி, இன்சூரன்ஸ் போன்ற சலுகைகள் வழங்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, “சென்னை மாநகராட்சியின் தீர்மானத்தில் தலையிட முடியாது. மேலும், தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை தற்போது எழவில்லை. தமிழக அரசு, சென்னை மாநகராட்சியுடன் கலந்து பேசி தூய்மைப் பணியாளர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, தூய்மைப் பணியை தனியாருக்குத் தர தடை இல்லை” என்று கூறி இந்த வழக்கை முடித்து வைத்தார்.