சோழிங்கநல்லூர் புழுதிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் - தனலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். சுரேஷ் ஆட்டோ ஓட்டுநராகவும், அவரது மனைவி தனலட்சுமி வீட்டு வேலை செய்தும் தங்களது மூன்று பிள்ளைகளை வளர்த்து வருகின்றனர். இதில் மூன்றாவது பெண் குழந்தையான 11 வயது சிறுமி புழுதிவாக்கம் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி, பள்ளிக்கு வந்த சிறுமி இங்க் பேனாவால் எழுதியிருக்கிறார். அப்போது பேனாவில் இருந்து மை சிறுமியின் உடையில் சிந்தியதாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த தலைமையாசிரியர் இந்திரா காந்தி, “உன்னை யார் இங்கு பேனா கொண்டு வரச் சொன்னது?” என்று கூறி சிறுமியைத் தரை துடைக்கும் மாப் குச்சியால் தலை மற்றும் உடம்பில் அடித்திருக்கிறார். இதனால் உடம்பின் பல்வேறு பகுதிகளில் சிறுமிக்குக் காயம் ஏற்பட்டிருக்கிறது. மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்குச் சென்ற சிறுமி தலைமை ஆசிரியை அடித்ததைத் தனது தாயாரிடம் கூறி அழுதிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய், சிறுமியின் உடலைப் பார்த்தபோது கை, கால் மற்றும் தலையில் வீக்கம் காணப்பட்டிருக்கிறது. உடனடியாகச் சிறுமியை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Advertisment

இதையடுத்து, தலைமையாசிரியர் தாக்கி தனது குழந்தைக்குப் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறி காவல் நிலையத்தில் தாய் தனலட்சுமி புகார் கொடுக்க முயன்றுள்ளார். ஆனால், காவல்துறைத் தரப்பும், கவுன்சிலரும் சேர்ந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தாய் தனலட்சுமி தரப்பில் தெரிவிக்கின்றனர். இதனிடையே 9 ஆம் தேதியிலிருந்து சிகிச்சையில் இருந்து வந்த சிறுமியை கடந்த 13 ஆம் தேதி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால், 23 ஆம் தேதி சிறுமிக்குத் தலைமை ஆசிரியை தாக்கிய இடத்தில் மீண்டும் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பதறிப்போன சிறுமியின் பெற்றோர், கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த சிறுமி தற்போது அறுவை சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் சிறுமியின் தாயார் தனலட்சுமி, பள்ளித் தலைமை ஆசிரியை மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்துக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் மடிப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்துப் பேசிய சிறுமியின் தந்தை சுரேஷ், “எனது குழந்தையைக் கொலை வெறி கொண்டு தாக்கிய தலைமையாசிரியை இந்திரா காந்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஒன்பதாம் தேதி விடுமுறை எடுத்துவிட்டுத் தற்போது வரை தலைமை ஆசிரியை பள்ளிக்கு வரவில்லை.  சென்னை மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல எந்தக் குழந்தைக்கும் இனிமேல் நடக்கக் கூடாது. எனது குழந்தைக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டிருக்கிறது. தலையில் தாக்கியதால் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளோம். குழந்தைகளை அடிக்கக் கூடாது எனப் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியும் தலைமை ஆசிரியை கொலை வெறித் தாக்குதல் நடத்தியது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

மேலும், சென்னை மாநகராட்சி நிர்வாகம் இந்தச் சம்பவத்தை மூடி மறைக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டிய அவர், தனது குழந்தைக்கு எந்தப் பிரச்சனை ஏற்பட்டாலும் அதற்குச் சென்னை மாநகராட்சியும், தலைமை ஆசிரியை இந்திரா காந்தியும்தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார். அதே சமயம், தலைமை ஆசிரியை இந்திரா காந்தியை சஸ்பெண்ட் செய்து சென்னை மாநகராட்சி கமிஷ்னர் குமரகுருபரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அரசு பள்ளி தலைமையாசிரியை தாக்கியதால் 11 வயது சிறுமி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சம்பவம் சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.