Chennai District Collector warns if men drive Pink Auto
சென்னை மாநகரத்தில் பெண்களுக்கென பிரத்யேகமாக பிங்க் ஆட்டோ செயல்பட்டு வருகிறது. இளஞ்சிவப்பு நிறம் கொண்ட அந்த ஆட்டோக்களில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புடன் பயணம் செய்வதற்காக உதவி எண் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொறுத்தப்பட்டிருக்கிறது. ரூ.1 லட்சம் மானியம் மற்றும் வங்கி கடன் உதவியுடன் கடந்த மார்ச் மாதம் தமிழக அரசால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்தால், மகளிர்களுக்கு இளஞ்சிவப்பு நிறம் கொண்ட ஆட்டோக்கள் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த வகை ஆட்டோக்களை ஆண்கள் இயக்குவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, சென்னை மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்களை சிலர் சென்னையில் பல இடங்களில் ஓட்டி வருவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சமூக நலத்துறை களா ஆய்வு குழு கடந்த சில நாட்களாக ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் சில ஆண்கள் ஓட்டுவதாக கண்டறியப்பட்டது. தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின்படி இளஞ்சிவப்பு ஆட்டோக்களை மட்டுமே இயக்க ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த விதிகள் பற்றி இளஞ்சிவப்பு ஆட்டோ இயக்கும் பயனாளிகளுக்கு பலமுறை எடுத்துரைத்த பின்னரும், ஆண்கள் ஓட்டுவது கண்டறியப்பட்டு விதிகளை மீறினால் ஆர்.டி.ஓ மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமூக நலத்துறையால் எச்சரிக்கப்பட்டது. சமூக நலத்துறை ரீதியாக எச்சரிக்கை விடப்பட்ட பின்னரும் தொடர்ந்து ஆண்கள் சிலர் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை இயக்கி வருவது புகார் பெறப்பட்டுள்ளது. மேலும் இது போல் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் ஆட்டோகளை பறிமுதல் செய்யப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us