Advertisment

“ஜனவரி 5ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும்” - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

புதுப்பிக்கப்பட்டது
chennaicourt

Chennai Court orders Tamil Nadu government to issue guidelines for political gatherings by January 5th

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு புதிய விதிகளை வகுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி , அரசியல் கட்சிகளின் ரோட் ஷோக்களுக்கு தமிழக அரசு வழிமுறைகளை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி, தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகளுக்குத் தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

அதாவது, கூட்டத்திற்கு வரும் மக்களை பொறுத்து காப்புத்தொகை அரசியல் கட்சிகள் கொடுக்க வேண்டும் என்றும், அங்கீகரிக்கப்பட்ட இடத்திற்கு கூட்டம் நடத்த வேண்டுமென்றால் 15 நாட்களுக்கு மனு அளிக்க வேண்டும் என்றும், அங்கீகரிக்கப்படாத மாற்று இடத்திற்கு 21 நாட்களுக்கு முன்னதாக மனு அளிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும், கூட்டத்தினரின் பாதுகாப்பு ஒழுங்கு முறைக்கு அமைப்பாளர்கள் பொறுப்பு ஆவார்கள் என்றும், பொது மற்றும் தனியார் சொத்திற்குச் சேதம் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்று அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என்ற பல்வேறு நிபந்தனைகளை தமிழக அரசு விதித்திருந்தது.

இது தொடர்பான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு கடந்த மாதம் 21ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அப்போது, இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மீது தங்களுடைய பரிந்துரைகளை வழங்குமாறு அதிமுக, தவெக மற்றும் தேசிய மக்கள் கட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட கட்சிகளும் தங்களுடைய பரிந்துரையை வழங்கியது. 

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு இன்று (19-12-25) நீதிபதி எம்.எம். ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “அரசியல் கட்சி கூட்டங்களுக்கு வகுக்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை,  தமிழக அரசு அடுத்தாண்டு ஜனவரி 5ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும். அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைப் பெற்று இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும்” என்று நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், தமிழக அரசு கொண்டு வந்த பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளில் ஏதேனும் குறைகள் இருந்தாலோ அல்லது ஆட்சேயபனம் இருந்தாலோ அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தை அணுகலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

chennai high court gathered road show
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe