chennai court order Bavarian robbers found guilty in AIADMK MLA massacre case
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வந்தவர் சுதர்சனம். இத்தகைய சூழலில் தான் கடந்த 2005ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி பெரியபாளையம் அருகே அமைந்துள்ள தானாக்குளத்தில் உள்ள அவரது வீட்டுக் கதவை உடைத்துப் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல், சுதர்சனத்தைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. அதோடு, அவரது மனைவி மற்றும் மகன்களைத் தாக்கி 62 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதனையடுத்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, கொள்ளையர்களைச் சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் அப்போதைய போலீஸ் ஐஜி ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாகத் துப்பு துலக்கியதில் ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலத்தைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அதோடு இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகள் இருவர் வடமாநிலத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்படி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற 3 பெண்கள் தலைமறைவாகிவிட்டனர். அதே சமயம் கைது செய்யப்பட்ட ஓம்பிரகாஷ் உள்பட இருவர் சிறையிலேயே இறந்துவிட்டனர். மீதமுள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜெயில்தார் சிங் ஆகிய 4 பேருக்கு எதிரான வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் அமர்வில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த வழக்கில், 86 பேர் காவல்துறையின் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர்.
அந்த வகையில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில், ஜெகதீஷ் உள்பட 4 பேருக்கு எதிரான இந்த வழக்கில் இன்று (21.11.2025) சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதில் அதிமுக எம்.எல்.ஏ சுதர்சனத்தை கொலை செய்த பவாரியா கொள்ளையர்களான ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேரும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தண்டனை விவரங்கள் வரும் நவம்பர் 24ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை உலுக்கிய கொலை, கொள்ளை வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பவாரியா கொள்ளையர்களை குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Follow Us