சென்னை, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள வீரபாண்டி நகரில், 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம், வடிகால் தொட்டியில் வாய் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. ஆரம்பத்தில், இந்தப் பெண் மழைநீர் வடிகால் தொட்டியில் விழுந்து உயிரிழந்ததாகவும், அந்த வடிகால் திறந்த நிலையில் இருந்ததால் இந்த விபத்து நேர்ந்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அந்தப் பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாய் இல்லை என்றும், சம்பவம் நடந்த இடம் ஒரு சிறிய வடிகால் தொட்டி மட்டுமே எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்தத் தொட்டியில் ஒருவர் விழுந்து உயிரிழப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கைகளும் வாயும் கட்டப்பட்டிருந்ததாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பெண்ணின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.