உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு தினம் இன்று (01.01.2026) கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நள்ளிரவு 12 மணியில் இருந்து புத்தாண்டை உலகின் பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த தினத்தையொட்டி, பட்டாசு வெடித்து வாண வேடிக்கைகளுடன் கொண்டாடி ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். அதோடு கேக் வெட்டி ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். அதே போன்ற கொண்டாட்டம் சென்னையிலும் நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி சென்னை காவல்துறை சார்பில் 19 ஆயிரம் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் சுமார் 1,500 ஊர்க்காவல் படையினர் மூலம் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை நகரின் முக்கிய பகுதியாக விளங்கும் கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜி.எஸ்.டி ரோடு மற்றும் பல்வேறு முக்கிய சாலைகளில் இருசக்கர வாகன பந்தயத்தை (Bike Race) தடுக்கும் நடவடிக்கையாக 30 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டன. அதோடு 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.
அதோடு மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவலர்கள், குதிரைப்படைகள் மற்றும் ஏ.டி.வி (ATV - All Terrain Vehicle) வாகனங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டனர். அதே போன்று கடற்கரை உயிர் காக்கும் பிரிவின் (Anti Drowning team) காவலர்கள் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் பொதுமக்கள் கடலில் இறங்காத வண்ணம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர மருத்துவ உதவிக்கு, முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டன.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/01/gcp-new-year-celebration-2026-01-01-17-04-17.jpg)
பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் பெரும்பாலான இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இந்நிலையில், “சென்னை பெருநகரில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம், விபத்துகள் இல்லாமல், குற்றங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் அமைதியாக கொண்டாடப்பட்டது. சிறப்பாக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சென்னை பெருநகர காவல் துறையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்” என சென்னை மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு காவல் ஆணையாளர் அருண் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். நள்ளிரவு 12 மணிக்கு டி6 அண்ணா சதுக்க காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை சந்திப்பு அருகில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுடன் காவல் ஆணையாளர் அருண் அவரது துணைவியாரும், இந்திய வருவாய்த் துறை அதிகாரியுமான யமுனாதேவி உடன் புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/01/gcp-new-year-celebration-1-2026-01-01-17-03-20.jpg)