வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில், வங்கக் கடலில் ‘டிட்வா’ புயல் உருவாகியது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த வகையில் டெல்டா மாவட்டங்கள் உட்படத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இத்தகைய சூழலில் தான் டிட்வா புயலானது வலுவிழந்து சென்னைக்கு தெற்கே 90 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இது இன்று பிற்பகலில் மேலும் வலுகுறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இல்லை எனவும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (01.12.2025) காலை 07.00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் இன்று (01.12.2025) காலை 10 மணி வரை லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி யூனியன் பிரதேச எல்லைக்கு உட்பட்ட புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (01.12.25) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிட்வா புயலால் சென்னையில் இன்றும் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், மெரினா கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகள்மற்றும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசான காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Follow Us