வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில், வங்கக் கடலில் ‘டிட்வா’ புயல் உருவாகியது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த வகையில் டெல்டா மாவட்டங்கள் உட்படத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் தொடர்ந்து  கனமழை பெய்து வருகிறது. 

Advertisment

இத்தகைய சூழலில் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதிகள் மற்றும் வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (வலுவிழந்த டிட்வா புயல்) கடந்த 6 மணிநேரமாகப் பெரிய அளவில் நகரமால் அதே இடத்தில் நீடித்தது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து, தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (02.12.2025) காலை 07.00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் இன்று (02.12.2025) காலை 10 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போன்று ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 4 மாவட்டங்களிலும், புதுச்சேரியின் ஒரு சில இடங்களிலும் காலை 10 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.