தலைநகர் சென்னையில் ரயில்வே நடைமேடையில் பட்டப்பகலில் பெண்ணிடம் நடந்த செயின் பறிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் பக்கத்தில் இளைஞர் ஒருவர் கேஷுவலாக அமர்ந்திருந்த நிலையில் அந்த நபர், திடீரென அப்பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு ஓடினார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி இருந்தது. விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் ரேஸிலின் என்பது தெரிந்தது. நகையைப் பறிகொடுத்த ரேஸ்லின் கத்திக் கூச்சலிட்ட போதிலும் அங்கு யாரும் வரவில்லை. ரயில்வே போலீசாரும் அங்கு இல்லாதது தெரியவந்தது.

இதுகுறித்து செயினை பறிகொடுத்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சியை வைத்து விசாரித்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட சௌந்தர் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.