“மத்திய அரசின் நடவடிக்கை கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது” - ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம்!

ops

மத்திய அரசின் நடவடிக்கை கல்வி உரிமைச் சட்டத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது எனத் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை பயிலும் குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்தல், மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்தல், அனைத்து குழந்தைகளுக்கும் சம வாய்ப்பினை வழங்குதல், சமூக மற்றும் பாலின இடைவெளிகளைக் குறைத்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சமக்ரா சிக்ஷா திட்டம் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்தத் திட்டத்தின்கீழ் மத்திய அரசின் பங்கு அறுபது விழுக்காடு எனவும், மாநில அரசின் பங்கு நாற்பது விழுக்காடு எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சமக்ரா சிக்ஷா நிதி குறித்து அண்மையில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, தமிழ்நாடு அரசு முன்மொழிக் கொள்கையை பின்பற்றாததன் காரணமாக 2024-2025 ஆம் ஆண்டு சம்கரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய 2,151 கோடி ரூபாய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சமக்ரா சிக்ஷா திட்டத்தின் நிதியை நம்பி கிட்டத்தட்ட 65 லட்சம் மாணவ, மாணவியர் தனியார் பள்ளிகளில் கல்வி பெற்று வருவதோடு, 6 இலட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்களும் பயனடைந்து வருகிறார்கள். 

இந்தத் திட்டத்தின் கீழான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக தனியார் பள்ளிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதோடு மட்டுமல்லாமல், அரசு சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சி, பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மைப் பணி உள்ளிட்ட பல பணிகள் முடங்கிப் போயுள்ளன. மேலும், மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இந்த ஆண்டு 25 விழுக்காடு மாணவ, மாணவியரை தனியார் பள்ளிகளில் சேர்க்க இயலாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தற்போது தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியரின் கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளது. 

மத்திய அரசின் நிபந்தனைகளை மாநில அரசு ஏற்காதது என்பது மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான பிரச்சனை. இந்தக் காரணத்தைச் சுட்டிக்காட்டி நிதியை விடுவிக்காமல் இருப்பது அப்பாவி ஏழை எளிய மாணவ, மாணவியரின் கல்வியையும், ஆசிரியர்களையும் பாதிக்கும் செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை கல்வி உரிமைச் சட்டத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது. சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் நிதியை விடுவிக்காதது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் ஏழையெளிய மாணவ, மாணவியரின் கல்வி மற்றும் ஆசிரியர்களை பாதிக்கும் செயல் என்பதைக் கருத்தில் கொண்டு, சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கான 2,151 கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று மத்திய அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

education fund O Panneerselvam samagra Shiksha Scheme schools students tn govt union govt
இதையும் படியுங்கள்
Subscribe