தற்போதைய நவீன யுகத்தில், சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. உடல் பருமன், மன அழுத்தம், மரபணு, புகைப்பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவற்றால் சிறுவயதிலேயே மாரடைப்பு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இதனை தற்காத்து கொள்வதற்கு சீரான உணவு, உடற்பயிற்சி, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்த்தல் போன்ற வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

இந் சூழ்நிலையில், கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் மட்டும் அடுத்தடுத்து 23 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மாரடைப்பால் உயிரிழந்த பெரும்பாலானோர் 19-45 வயதுடையவர்கள் ஆவர். இந்த சம்பவம் கர்நாடகா மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திடீர் மாரடைப்புகளுக்கு கொரோனா தடுப்பூசி காரணமாக இருக்குமா? என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்ததாவது, “கொரோனா தடுப்பூசியை அவசரமாக அங்கீகரித்து பொதுமக்களுக்கு விநியோகித்ததும் இந்த இறப்புகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை மறுக்க முடியாது. ஏனெனில் உலகளவில் பல ஆய்வுகள் சமீபத்தில் அதிகரித்து வரும் மாரடைப்புகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளன. இந்த விஷயத்தில் பாஜக எங்களை விமர்சிக்கும் முன், அவர்கள் தங்கள் மனசாட்சியைக் கேட்க வேண்டும். இந்த இறப்புகளுக்கான உண்மையான காரணத்தை கண்டறிய ஜெயதேவா இருதய அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் ரவீந்திராத் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஆய்வுகளை மேற்கொண்டு, 10 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மாநிலத்தில் இளைஞர்களிடையே ஏற்படும் திடீர் மரணங்கள் கொரோனா தடுப்பூசிகள் அல்லது வேறு ஏதேனும் சுகாதாரக் காரணிகளுடன் தொடர்புடையதா என்பதை ஆய்வு செய்ய இதே குழு முன்பு கேட்டுக் கொள்ளப்பட்டது” என்று தெரிவித்தார்.

மாரடைப்புகளுக்கு கொரோனா தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என்று சித்தராமையா சந்தேகம் எழுப்பியிருந்தது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சித்தராமையாவின் குற்றச்சாட்டுக்கு மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், ‘எந்தவித அறிவியல்பூர்வமான ஆதாரம் இல்லாமல் இது போன்ற குற்றச்சாட்டை முதல்வர் சித்தராமையாக வைத்திருக்கிறார். இளைஞர்களுக்கு ஏற்படக்கூடிய திடீர் மரணங்களுக்கும் கொரோனா தடுப்பூசி சம்பந்தம் இல்லை. இளைஞர்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் என்பது மரபணு அல்லது அவர்களுக்கு இருக்கக்கூடிய சுகாதார நிலை அடிப்படையில் தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஐசிஎம்ஆர் மற்றும் கேம்ஸ் டெல்லி மருத்துவமனை ஆகியவற்றின் உதவியோடு நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் மிகவும் அரிதாகவே இருக்கும். 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 47 மருத்துவமனைகளில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இந்த முடிவு கிடைத்துள்ளது. எனவே, இளைஞர்களுக்கு ஏற்படக்கூடிய உயிரிழப்புகளுக்கு கொரோனா தடுப்பூசி தான் காரணம் என்று கூறுவது ஏற்புடையது அல்ல, அது ஒரு போலியான செய்தி’ எனத் தெரிவித்துள்ளது.