Central government Permission to charge additional fees Ola, Uber passengers at peak hours
இந்தியாவில் வாடகை கார், பைக் டாக்சி போன்ற வாகனங்கள் மூலம் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு வேகமாகவும், குறைந்த கட்டணம் மூலமாகவும் செல்கின்றனர். அதில் ஓலா, ஊபர் போன்ற செயலிகள் மூலமாக வாகனங்களை முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இதற்காக குறிப்பிட்ட தொகையை, கமிஷனாக வாடகை கார் ஓட்டுநர்களிடம் ஓலா, ஊபர் நிறுவனங்கள் பெற்றுக்கொள்கின்றன. அதே நேரம், பீக் ஹவர்ஸ் (Peak Hours) என்றும் சொல்லப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக கட்டணங்களையும், தேவை குறைவான நேரங்களில் குறைவான கட்டணங்களையும் வசூலித்து வந்தன. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.
இந்த நிலையில், ஓலா, ஊபர் செயலிகள் பயன்படுத்தும் பயணிகளுக்கு மேலும் அதிர்ச்சி தரக்கூடிய வகையில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் புதிய விதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், ஓலா மற்றும் ஊபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள், பீக் ஹவர்ஸில் 1.5 முதல் 2 மடங்கு அதிக கட்டணமும், அவசரமில்லாத நேரங்களில் அடிப்படை கட்டணத்தைவிட 50 சதவீதம் குறைவான கட்டணமும் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. காரணமின்றி ஒரு பயணம் ரத்து செய்யப்பட்டால், ஓட்டுநருக்கும், பயணிக்கும் தலா ரூ.100க்கும் மிகாமல் கட்டணத்தில் 10% அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்ட நாளில் இருந்து மூன்று மாதங்களுக்குள் அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், திருத்தப்பட்ட விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றுடன் கூடுதலாக விதிகளைச் சேர்க்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. 3 கி.மீ தூரம் வரை ஓட்டுநர் பயணித்து வந்து, பயணி இருக்கும் இடத்தை அடைந்தால் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அதற்கு மேல் பயணித்து வந்தால் மட்டும் சிறு தொகை கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணம் தொடங்கும் இடத்தில் இருந்து பயணி இறக்கிவிடப்படும் இடத்திற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், பயணிகளுக்கு குறைந்தப்பட்சம் ரூ.5 லட்சம் காப்பீட்டு தொகையை ஒருங்கிணைப்பாளர் உறுதி செய்வார் என்றும் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.