Central government orders suspension of TRP ratings of news channels
ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையிலான போர் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த போர் பதற்றத்தின் காரணமாக, அரபு நாடுகளில் பெரும்பாலான இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இது, நம் நாட்டில் இருந்து அந்த நாடுகளில் வேலைக்குச் சென்றுள்ளவர்களின் குடும்பத்தினருக்குப் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தொலைக்காட்சிகளில் வெளியாகும் இந்த போர் குறித்தான தேவையற்ற பரபரப்பு தகவல்கள் மற்றும் ஊகமான செய்திகள் மேலும், அந்த குடும்பத்தினரின் பீதியை அதிகரிக்கச் செய்வதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த நாடுகளில் வேலைக்குச் சென்றிருப்பவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த பதற்றத்தைத் தணிக்கும் பொருட்டு மத்திய அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
எனவே, மக்களின் பொது நலனைக் கருத்தில் கொண்டு, தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமாகப் பரவும் பீதியைக் கட்டுப்படுத்த, தொலைக்காட்சி மதிப்பீட்டுப் புள்ளிகள் (டிஆர்பி) குறித்தான விவரங்களை வெளியிடுவதை நிறுத்தி வைக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. அடுத்த நான்கு வாரங்களுக்கு அல்லது மறு அறிவிப்பு வரும் வரை இந்த டிஆர்பி விவரங்களை வெளியிடாமல் நிறுத்தி வைக்க மத்திய அரசு, பார்க் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதுவரை தொலைக்காட்சி மதிப்பீட்டுப் புள்ளிகள் குறித்தான விவரங்களை பார்க் நிறுவனம் வெளியிட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us