பிரதமர் மோடி, வெளிநாட்டு பயணங்களுக்காக எதிர்கட்சிகளால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருபவர். அவர் எப்போது வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். தற்போது கூட, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR), ஆபரேஷன் சிந்தூர், ஜக்தீப் தன்கரின் திடீர் ராஜினாமா உள்ளிட்ட விவகாரங்கள் நாட்டில் பூதாகரமான நிலையிலும் அதற்கு எந்தவித பதிலும் அளிக்காமல் பிரதமர் மோடி பிரிட்டன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களால் மத்திய அரசுக்கு 5 ஆண்டுகளில் ரூ.362 கோடி செலவாகியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் மழைக்காலக் கூட்டத்தொடரின் போது, பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்களால் ஆன செலவினங்கள் எவ்வளவு? என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரையன் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், செலவு விவரங்களை வழங்கினார். அதில், 2021ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக அரசாங்கத்திற்கு கிட்டத்தட்ட ரூ.362 கோடி செலவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2025ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கான அவரது பயணங்களுக்காக ரூ.67 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாகதவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், பிரான்ஸ் பயணத்துக்கு ரூ.25 கோடிக்கும் அதிகமாக செலவானதாகவும், அமெரிக்கா பயணத்திற்கு ரூ.16 கோடிக்கும் அதிகமாக செலவானதாகவும், இலங்கை பயணத்துக்கு ரூ.4.4 கோடி செலவானதாகவும், தாய்லாந்து பயணத்துக்கு ரூ.4.9 கோடி செலவானதாகவும், சவுதி அரேபியா பயணத்துக்கு ரூ.15.5 கோடி செலவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டின் தாய்லாந்து மற்றும் இலங்கை பயணத்திற்கு ரூ.9 கோடி செலவாகியுள்ளதாகவும், சவுதி அரேபியா பயணத்திற்கு மட்டும் ரூ.15.54 கோடி செலவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டுகளைப் பொறுத்தவரை 2024ஆம் ஆண்டில் ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட 16 நாடுகளுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணங்களுக்கு ரூ.109 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் ரூ.93 கோடியும், 2022ஆம் ஆண்டில் ரூ.55.82 கோடியும், 2021ஆம் ஆண்டில் ரூ.36 கோடியும் பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021, 2023, 2024, 2025 என 4 ஆண்டுகளில் 4 முறை அமரிக்காவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டதற்கு மொத்தம் ரூ.74.41 கோடி செலவாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதோடு பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான பொது நிகழ்வுகள், விளம்பரம் மற்றும் ஒளிபரப்புவதற்கும் ரூ.1.03 கோடி மத்திய அரசு செலவிட்டுள்ளது. உதாரணமாக 2023ஆம் ஆண்டு எகிப்து பயணத்தின் விளம்பரத்திற்காக மட்டும் ரூ.11.90 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.