2027ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடத்தப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே முடிவு செய்துள்ளது. அதாவது அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை குடியிருப்புகளை பட்டியலிடவும், 2027ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில், டெல்லியில் நேற்று (12-12-25) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், அஸ்விணி வைஷ்ணவ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Advertisment

மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகள் 1990-ன் படி இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடைசியாக 2011இல் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதனையடுத்து 2021க்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முதல்கட்ட தயாரிப்புகள் அனைத்தும் முடிவடைந்து, சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2020 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்கவிருந்தது. ஆனால், நாடு முழுவதும் கொவிட் -19 பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.