தலைநகர் டெல்லியில் முதல்வர் ரேகா குப்தா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள தனது வீட்டில் இருந்து முதல்வர் ரேகா குப்தா நேற்று (20-08-25) காலை பொதுமக்களை சந்தித்து அவர்களை குறைகளை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர், முதல்வர் ரேகா குப்தா மீது திடீரென்று கடுமையாக தாக்குதல் நடத்தினார். இதில் முதலமைச்சர் ரேகா குப்தாவிற்கு முகம் மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனை கண்ட பாதுகாப்பு படையினர், அந்த நபரை உடனடியாக பிடித்து கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில், டெல்லி முதல்வரைத் தாக்கியவர் குஜராத்தைச் சேர்ந்த 41 வயதான ராஜேஷ் கிம்ஜி என்பது தெரியவந்தது. மேலும் நாய் பிரியரான அவர், சமீபத்தில் டெல்லியுள்ள தெருநாய்களை பிடித்து காப்பங்களில் அடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஆதரவு அளித்ததால் இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ராஜேஷை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், காயமடைந்த ரேகா குப்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவத்திற்கு பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு இஸட் (Z) பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ரேகா குப்தாவுக்கு எதிராக அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 22 முதல் 25 சிஆர்பிஎஃப் அதிகாரிகள் கொண்ட குழு ஆயுதம் ஏந்தியவர்களாகவும் முதல்வரைப் பாதுகாக்க 24 மணி நேரமும் தயாராகவும் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.