Central government considering restrictions on the use of social media!
டெல்லியில் பாரத் மண்டபத்தில் கடந்த 16ம் தேதி ஏஐ உச்சி மாநாட்டைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாடு 5 நாட்களுக்கு, அதாவது வருகின்ற 20 ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டுடன், ஏஐ தாக்கக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது. இதில், கூகுள், மெட்டா மற்றும் அமேசான் போன்ற முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஏஐ யின் புதுமைகளைக் காட்சிப்படுத்தியுள்ளன. இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ‘ஏஐ தொழில் நுட்பம் மக்களின் திறனை மேம்படுத்தும். புதிய தொழில் நுட்பங்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்’ என்று தெரிவித்திருந்தார்.
அடுத்ததாக, நேற்று (17-02-26) இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், ‘ஏஐ மூலமாக உருவாக்கப்படும் டீப்பேக் (போலியான) வீடியோக்கள் சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றது. இந்த அச்சுறுத்தலில் இருந்து நமது குழந்தைகளையும், சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும். எனவே, இதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியது அவசியமாகிறது. அதே போல, எக்ஸ், மெட்டா, யூ-டியூப் மற்றும் நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அரசின் சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும்.
மேலும், குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான வயது வரம்பு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு நிறுவனங்களுடன் தற்போது ஆலோசனை நடந்து வருகிறது. டீப் பேக் விவகாரம் குறித்து நாடாளுமன்ற குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. எனவே, இந்த கட்டுப்பாடுகள் தொடர்பாகப் பாராளுமன்றத்தில் அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்துக்கள் மூலமாகக் கடுமையான சட்டங்கள் உருவாக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Follow Us