Central government announced Padma awards for actors Madhavan, Mammootty
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தாண்டு (2026) 5 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 13 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 113 பேருக்கு பத்மஸ்ரீ என மொத்தம் 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கே.விஜயகுமாருக்கு சிவில் சர்வீஸ் பிரிவில் பத்ம்ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுக்கொன்ற பணிக்கு தலைமை வகித்த கே.விஜயகுமார், சென்னை மாநகர போலீஸ் கமிஷனராகவும், உள்துறை அமைச்சக ஆலோசகராகவும் இருந்துள்ளார். அதே போல் மறைந்த ஓவியர் ஆர்.கிருஷ்ணனுக்கு கலைத்துறை பிரிவில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய ஓவியக் கலையை கவுரவிக்கும் வகையில் ஆர்.கிருஷ்ணனுக்கு இறப்புக்குப் பின் விருது வழங்கப்படுகிறது.
அதே போல், தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் ஆராய்ச்சியாளர் புண்ணியமூர்த்தி நடேசன், திருமுறை மற்றும் தேவாரம் உள்ளிட்ட தமிழ் பக்தி இலக்கியங்களை இசை வடிவில் மக்களிடம் பாடி பரப்பிய ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், ஓவியர் நீலகிரி ஆர்.கிருஷ்ணன், சிற்பக் கலைஞர் காளியப்ப கவுண்டர், திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோருக்கும் பத்ம்ஸ்ரீ விருது மத்திய அரசு அறிவித்துள்ளது.சென்னை ஐஐடி இயக்குநர் வீழிநாதன் காமகோடிக்கு அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் பிரிவில் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான ரோஹித் சர்மாவுக்கு பத்ம்ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு பத்ம்ஸ்ரீ விருதும், நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, மறைந்த கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு பத்ம விபூஷன் விருதும், நடிகர் மம்முட்டி மற்றும் பாடகி அல்கா யாக்னிக் ஆகியோரு பத்ம பூஷன் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் விண்வெளிக்கு சென்று திரும்பி சாதனை படைத்த சுபான்ஷூ சுக்லாவுக்கு அசோக சக்ரா விருதும், ஹெச்.வி ஹண்டேவுக்கு மருத்துவமனை பிரிவில் பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹண்டே முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us