பீகாரைத் தொடர்ந்து வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணிகள் (S.I.R - Special Intensive Revision) தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இத்தகைய சூழலில் தான் இந்தாண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (01.12.2025) காலை தொடங்கியது. அப்போது, தேர்தல் ஆணையம் கொண்டு வந்த எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அதே போல், மாநிலங்களவை எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. அங்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

Advertisment

இந்த நிலையில், குளிர்காலக் கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று (02.12.2025) காலை தொடங்கியது. அதற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் எஸ்.ஐ.ஆருக்கு எதிராக இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி மல்லிகார்ஜூனா கார்கே, திமுகவைச் சேர்ந்த கணிமொழி எனப் பலரும் கலந்து கொண்டனர். இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதிக்குள் நுழைந்து முழக்கம் எழுப்பினர். இதனையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இதனிடையே, இன்று பிற்பகல் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வரும் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் குறித்து இரண்டு நாள் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, மாநிலங்களவையில் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க அரசாங்கம் தயாராக உள்ளது. ஆனால், அதற்கு காலக்கெடுவை விதிக்க வேண்டாம். பல பிரச்சனைகள் நாடாளுமன்றத்தின் முன் பட்டியலிடப்பட்டுள்ளன. அவைகளுக்கு இடமளிக்கப்பட வேண்டும். எதிர்க்கட்சிகள் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்படவில்லை. எனவே, அரசாங்கம் எந்த விஷயத்தையும் விவாதிக்கத் தயாராக இல்லை என்று கருத வேண்டாம்” என்று கூறினார். 

Advertisment