வரி வசூல் மூலம் தமிழ் மக்களை வஞ்சித்து வசூலித்த பெருந்தொகையை எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டை சுரண்டுகிற அரசாக நரேந்திர மோடி அரசு விளங்கி வருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க.வையும், அதற்கு துணைபோகும் அ.தி.மு.க.வையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் அனைத்து மாநகரங்களில் தலா ஒரு இடத்திலும் மற்றும் ஒன்றியம், நகரம், பேரூர் அளவிலும் வருகிற 12.2.2026 (வியாழக்கிழமை) அன்று மாலை 4.00 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 12 வருடங்களாக ஒன்றிய பா.ஜ.க. அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறது. கார்ப்பரேட்டுகளின் நலன் சார்ந்த பட்ஜெட்டை பா.ஜ.க. அரசு சமர்ப்பித்திருக்கிறது. தமிழ்நாட்டிற்கான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்படி வழங்க வேண்டிய ரூபாய் 3458 கோடியும், 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது. கிராமப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்த 100 நாள் வேலை திட்டத்தில் இருந்த மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, தேசத்தந்தைக்கு இழுக்கு சேர்த்த பா.ஜ.க.வை நாட்டு மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். மோடியின் நெருங்கிய நண்பரான அதானியின் சொத்து மதிப்பு கடந்த 12 ஆண்டுகளில் 5 பில்லியன் டாலராக இருந்தது தற்போது 85 பில்லியன் டாலராக 17 மடங்கு உயர்ந்திருக்கிறது.
மற்றொரு நண்பரான அம்பானியின் சொத்து மதிப்பு 23.6 பில்லியன் டாலரில் இருந்து 106 பில்லியன் டாலராக 5 மடங்கு உயர்ந்திருக்கிறது. அதேபோல, கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெற்றதால் பா.ஜ.க.வின் வருமானம் 12 மடங்கு உயர்ந்திருக்கிறது. 2014 இல் 70 கோடீஸ்வரர்கள் இருந்தனர். தற்போது 284 கோடீஸ்வரர்களாக எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. இவர்களது மொத்த சொத்து மதிப்பு 98 லட்சம் கோடி ரூபாய். இந்த அளவிற்கு கார்ப்பரேட்டுகள் சொத்து குவிப்பதற்கு பா.ஜ.க. அரசு பல்வேறு திட்டங்களின் மூலமாக சலுகை காட்டியது தான் இந்த உயர்வுக்கு காரணமாகும். இத்தகைய கார்ப்பரேட்களின் நலனுக்காக செயல்படுகிற பிரதமர் நரேந்திர மோடி, ஏழை-எளியோரின் நலனில் அக்கறையுடன் இருப்பதாக பேசுவதை நாட்டு மக்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/10/modi-malasia-speech-1-2026-02-10-12-09-30.jpg)
மலேசியாவில் பிரதமர் மோடி, தமிழின் பெருமையைப் பற்றி பேசியிருக்கிறார். 85,000 மக்கள் மட்டுமே பேசுகிற சமஸ்கிருத மொழிக்கு ஒன்றிய அரசு 2014 முதல் 2025 வரை ஒதுக்கிய நிதி ரூபாய் 2532.59 கோடி மட்டுமே. ஆனால், செம்மொழி தகுதி பெற்ற தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா ஆகிய மொழிகளுக்கு ஒதுக்கிய தொகை ரூபாய் 147.56 கோடி. இதில் சராசரியாக தமிழுக்கு ஆண்டொன்றுக்கு ஒதுக்கிய தொகை வெறும் ரூபாய் 13 கோடி மட்டுமே. இப்படி மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நிதி ஒதுக்கீட்டில் தமிழ் மொழியை புறக்கணித்து விட்டு, மலேசியாவில் தமிழுக்காக பிரதமர் மோடி நீலிக் கண்ணீர் வடிப்பதை எந்த தமிழரும் நம்ப மாட்டார்கள்.
கடந்த 7 ஆண்டுகளில் ஒன்றிய அரசுக்கு வரி வசூல் மூலமாக வழங்கிய தொகை ரூபாய் 7.38 லட்சம் கோடி. ஆனால், இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு அதில் திரும்ப கொடுத்த தொகை ரூபாய் 2.56 லட்சம் கோடி வரி வசூல் மூலம் தமிழ் மக்களை வஞ்சித்து வசூலித்த பெருந்தொகையை எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டை சுரண்டுகிற அரசாக நரேந்திர மோடி அரசு விளங்கி வருகிறது. இந்தியாவிலேயே பா.ஜ.க. காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை உறுதிபடுத்துகிற வகையில், வருகிற பிப்ரவரி 12 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்தியா கூட்டணியின் சார்பாக நடைபெறுகிற இக்கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக அமைவதற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் ஒருங்கிணைந்து முனைப்புடன் செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us