நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தொடரைக் கூட்டுவதற்குக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். ஜனவரி 28ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடரும் இந்த கூட்டத்தொடர், வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
குடியரசுத் தலைவரின் உரை, மத்திய பட்ஜெட் அறிவிப்பு ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் எனப் பிப்ரவரி 13ஆம் தேதி வரை முதல் அமர்வு நடைபெற உள்ளது. அதன் பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் 2வது அமர்வு வரும் மார்ச் மாதம் 9ஆம் தேதி மீண்டும்கூட உள்ளது. அதன்படி ஏப்ரல் 2ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்களுடனான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கான முன்னோடி ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று (10.01.2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நிதித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டி. உதயச்சந்திரன், இணைச் செயலாளர் (பட்ஜெட்) பிரத்திக் தாயள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படக்கூடிய திட்டங்களுக்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு தனது பங்குத்தொகையான 9 ஆயிரத்து 500 கோடியை விடுவிக்க வேண்டும். அமெரிக்காவின் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக நிறுவனங்களுக்கு மத்திய அரசு வரிச்சலுகை வழங்க வேண்டும்” எனத் தமிழ்நாடு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Follow Us