'Central and state governments should protect farmers' - Thirunavukkarasu interview Photograph: (congress)
நெல் கொள்முதலில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என காங்கிரசின் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் நிர்வாகி திருநாவுக்கரசிடம், '2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெறும். பெரும்பான்மையான மக்கள் திமுக ஆட்சிக்கு எதிராக இருக்கிறார்கள். எனவே என்டிஏ கூட்டணிதான் வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்' அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த திருநாவுக்கரசு, ''எடப்பாடி பழனிசாமி நாங்கள் போன முறை வாங்கியதை விட மோசமாக தோற்றுப் போவோம். எங்கள் கூட்டணி தோற்று விடும். திமுக தலைமையிலான ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வருவார். காங்கிரஸ்-திமுக கூட்டணி தான் ஜெயிக்கும் என்றெல்லாம் சொல்வாரா? எதிர் கூட்டணியான எங்கள் (திமுக-காங்கிரஸ்) கூட்டணி வெற்றி பெறாது. நாங்கள் தான் ஜெயிப்போம் என்றுதான் சொல்லுவார். அப்படி சொன்னால் தான் அவர் எதிர்க்கட்சித் தலைவர். மக்கள் கருதுகிறார்களோ இல்லையோ அவர் அப்படி கருதுகிறார். அப்படி சொன்னால் தான் அவர் எதிர்க்கட்சித் தலைவர். அப்படி சொல்லவில்லை என்றால் அவர் எங்கள் கூட்டணிக்கு வந்து விட்டார் என்று அர்த்தம்''என்றார்.
நெல் கொள்முதல் தொடர்பான கேள்விக்கு, ''அரசு தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தஞ்சாவூரில் தொடர்ந்த மழையால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அரசு சார்பில் கொள்முதல் நடக்கிறது என்கிறார்கள். ஈரம் இருப்பதால் எடுக்காமல் இருக்கிறார்கள். விலை குறைத்துப் போகிறது என்ற பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. மழைக்காலத்தில் ஈரப்பதத்துடன் தான் நெல் இருக்கும். அதற்கு வாங்குவதை புறக்கணிக்கக் கூடாது. அல்லது சாதா காலங்களில் இருக்கக்கூடிய ஈரப்பதத்தை காட்டிலும் மழைக்காலத்தில் நனைந்த பிறகு நெல்லின் ஈரப்பதம் கூடுதலாக தான் இருக்கும். எனவே கூடுதலாக பர்சன்டேஜ் வைத்து வாங்கித்தான் ஆக வேண்டும். மாநில அரசு அதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும். மத்திய அரசும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
விவசாயிகளை பாதிப்புகளில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும். ஏற்கனவே விவசாயிகள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இதனால் மேலும் பாதிப்பு ஏற்பட்டு விவசாய குடும்பங்கள் அழிவுக்கு போக வேண்டிய சூழ்நிலை வரும். அதைக் காப்பாற்ற வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு''என்றார்.a
Follow Us