Censor Board appeals against judge's order regarding Jana Nayagan film
விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று (09.01.2026) வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதன்படி, இந்த வழக்கை அவசர வழக்காக நீதிமன்றம் கடந்த 6ஆம் தேதி எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கின் விசாரணை நேற்று முன் தினம் (07-01-26) நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது, படத்தில் மத உணர்வுகள் தூண்டும் வகையில் ஒரு காட்சி இருப்பதாக தணிக்கை குழுவுக்கு புகார் வந்ததாலும், பாதுகாப்பு படைகளின் சின்னம் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாலும் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பி.டி.ஆஷா, தணிக்கை வாரியத்திடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.
தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை இன்று (09-01-25) வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனால், ஜனநாயகன் படத்தை ஒத்திவைப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதன்படி, ஜன நாயகன் படத்துக்கு தணிக்கை சான்று கோரிய வழக்கில் நீதிபதி ஆஷா இன்று (09-01-25) தீர்ப்பளித்தார். அதில் ஜன நாயகன் படத்துக்கு யு/ஏ தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் உத்தரவை ரத்து செய்தார். இது தொடர்பாக நீதிபதி கூறியதாவது, “ஒரு உறுப்பினரின் புகாரை கொண்டு எப்படி மறு ஆய்வுக்கு அனுப்ப முடியும்?. பரிந்துரைத்த மாற்றங்களை செய்தால் தணிக்கை சான்று வழங்கியாக வேண்டும். படத்திற்கு யு/ஏ சான்று வழங்கியதும் தலைவருக்கான அதிகாரம் முடிந்தது. தணிக்கை தலைவர் அதிகாரத்தை மீறி மறு ஆய்வுக்கு அனுப்பியதால் நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது’ என்று கூறினார்.
இந்த தீர்ப்பின் மூலம் விஜய்யின் ஜன நாயகன் படம் விரைவில் திரைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனி நீதிபதி பி.டி.ஆஷாவின் தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீடு செய்துள்ளது. அதற்கு தலைமை நீதிபதி, ‘மேல்முறையீட்டை மனுவாக தாக்கல் செய்துவிட்டு தெரிவியுங்கள். மனுவாக தாக்கல் செய்தால் விசாரணை நடத்துவது தொடர்பாக பிற்பகல் முடிவு செய்யப்படும்’ என்று தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார். தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால் ஜன நாயகன் படத்துக்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.
Follow Us