புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் துரையரசபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல் இன்று (29.08.2025 - வெள்ளிக்கிழமை) மதியம் மாணவ, மாணவிகள் சத்துணவு வாங்கி பள்ளி வகுப்பறைகள் வராண்டாவில் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர்.
அப்போது தீடீரென சிமெண்ட் மேல் பூச்சு உடைந்து மாணவ, மாணவிகள் தலையிலும் மதிய உணவிலும் கொட்டியுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் அதிர்ச்சியடைந்து அலறியுள்ளனர். சத்தம் கேட்டு ஆசிரியர்கள் ஓடிவந்து மாணவ, மாணவிகளை சமாதானம் செய்து சிமெண்ட் பூச்சு கொட்டியதில் லேசான காயமடைந்த பிரதிபா, ஸ்ரீதரன், குகன், லஷ்சன், கார்த்திக், அருளானந்தம், சுகுமாறன் உள்ளிட்ட 7 மாணவ, மாணவிகளை உடனடியாக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது, “அரசுப் பள்ளி கட்டடங்கள் உறுதியாக உள்ளதா என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு குழு வந்து சுவர்கள், மேல் பூச்சுகளை தட்டிப் பார்த்து பள்ளி கட்டடங்கள் தரமாக உறுதியாக உள்ளதாக கூறியுள்ளனர். ஆனால் இதுபோல இன்னும் மேல்பூச்சு உடையும் பள்ளிகளும் உள்ளது. இந்த துரையரசபுரம் பள்ளிக்கு ஆய்வுக் குழு வந்து ஆய்வு செய்ததா என்றும் ஆய்வு செய்து உறுதிச் சான்று கொடடுத்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கின்றனர்.